மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 பங்குனி மாத ராசிபலன்

Published On 2025-03-12 08:42 IST   |   Update On 2025-03-12 08:51:00 IST

மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்தில் பலம்பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் குரு வீற்றிருந்து சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெறுகிறார். எனவே பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும்.

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்போது துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். விரய ஸ்தானம் பலம்பெறுவதால் வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

மீன - புதன் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரும். பொதுவாக உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதியான புதன் 12-ல் மறையும் பொழுது 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அடிப்படையில், எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. வருமானம் உயரும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. 'புத - சுக்ர யோகம்' இருப்பதால், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

கும்ப - புதன் சஞ்சாரம்

மீன ராசியில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, அதிசாரமாக கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

ஒரு சிலர் உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். திடீர் பயணங்கள் அனுகூலமானதாக அமையும். பொதுவாழ்வில் இருப் பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

மீன - சுக்ரன் வக்ரம்

மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் என்பதால், கலகலப்பான குடும்பத்தில் சலசலப்பு உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள்.

கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உண்டு. நிலைமை சீராக சுக்ரன் அருளும் தலங்களுக்குச் சென்று வருவதோடு, குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

கடக - செவ்வாய்

பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் உங்கள் ராசிநாதன் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே உடல்நலத்தில் மிகமிக கவனம் தேவை. கை வலி, கால் வலி, மூட்டு வலி என்று ஏதாவது ஒரு தொந்தரவு வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. அதேநேரம் அஷ்டமாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

சகோதர வர்க்கத்தினரால் நன்மை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க பயிற்சி தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 22, 23, 27, 28, ஏப்ரல்: 2, 3, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Similar News