என் மலர்tooltip icon

    மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

    மேஷம்

    2025 கார்த்திகை மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகின்றார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். அருளாளர்களின் ஆசியும், அன்பு நண்பர்களின் ஆதரவும் திருப்தி தரும். ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து விருச்சிக ராசியில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகைமாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே இந்த வக்ர காலத்தில் வளர்ச்சியும் உண்டு, தளர்ச்சியும் உண்டு. நினைத்தது நிறைவேறாமலும் போகலாம். நடக்காது என்று நினைத்த காரியம் நடைபெற்று மகிழச்சியை வழங்கலாம். இருப்பினும் இக்காலத்தில் குரு வழிபாடு அவசியம் தேவை.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அவர் உங்களுக்கு யோகத்தை வழங்கப்போகிறார். அங்குள்ள சூரியன், செவ்வாயோடு இணைகின்றார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. இதனால் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையும் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் ஒரு நல்ல தகவல் கிடைக்கும். அரசு வழியில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இப்பொழுது நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைத்து, வேலையும் கிடைத்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், தற்சமயம் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். இதுவரை சேமித்த சேமிப்பை இப்பொழுது அசையா சொத்தாக மாற்ற முயற்சிப்பீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க சகோதரர்கள் உதவுவர்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் இந்தநேரம், ஒரு அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். அடிப்படை வசதிகள் பெருகும். ஆனந்த வாழ்க்கை மலரும். குழந்தைகள் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நினைத்தது நடக்கும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு கடன் என்ற மூன்றெழுத்து தீரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 23, 24, 27, 28, டிசம்பர்: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி் தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மேஷம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.

    சனி-ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மேஷம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தேக நலன் சீராகும். சொத்துக்களால் யோகமும், சொந்தங்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சென்ற மாதம் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தபோது, கடன் சுமை அதிகரித்து, கவலைகள் மேலோங்கி இருக்கலாம். அந்த நிலை இப்பொழுது மாறும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும். சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு உச்சம் பெறும் நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இந்த இடங்களை உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. குருவின் பார்வை பலத்தால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். ஊர் மாற்றம், இடமாற்றம் நன்மை தரும் விதம் அமையும். தொழிலில் பணியாளர்களின் மாற்றங்களும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் காட்டும் ஆர்வமும் பலன்தரும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே அதன் கடுமை கொஞ்சம் குறையும். மாதக் கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் சனி வலிமையடைவதால் தொழில் வியாபாரத்தில் மிகமிக கவனம் தேவை. நெருக்கடி நிலை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் பண நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுதலான இடத்தால் மனதிற்கு திருப்தி இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் குறுக்கீடுகள் உண்டு. மாணவ - மாணவியர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கை சக்கரம் சுழலும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 18, 19, 29, 30, அக்டோபர்: 5, 6, 10, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.

    மேஷம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். தொழில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, கடன் சுமை குறைதல் போன்றவை ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்போது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், பஞ்சம ஸ்தானத்திலேயே பலம்பெற்று சஞ்சரிப்பதால் தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். ஊக்கமும், உற்சாகமும் அதிகரித்து உடனுக்குடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. 'அதிக விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை குறைந்த விலைக்கு கேட்கிறார்களே' என்ற கவலை அகலும். பூமி விற்பனையில் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் 'புத சுக்ர யோகம்' இருப்பதால் நல்ல சம்பவங்கள் பலவும் நடை பெறும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்றோ உங்கள் பிள்ளைகள் விரும்பினால், அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உடன் பிறப்புகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துகளை பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புத-ஆதித்ய யோகம் இருப்பதால் அரசுவழியில் அனுகூலம் உண்டு.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்குஅதிபதி செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அவர் பார்வை உங்கள் ராசியிலேயே பதிகின்றது யோகம்தான். கல்யாணக் கனவுகள் நனவாகும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. வீடுகட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுதுபார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தனவரவு தாராளமாக வந்துசேரும். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி செழிப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் வரலாம். கலைஞர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 21, 22, செப்டம்பர்: 2, 3, 7, 8, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மேஷம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    மேஷ ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். செவ்வாயின் பார்வை சனி மீது பதிவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தன வரவில் தடைகள் ஏற்படும். முன்கோபம் காரணமாக முன்னேற்றத்தில் பாதிப்புகள் ஏற்படுவதோடு, உறவுகள் பகையாகி உள்ளத்தை வாடவைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பின்னால் தொழிலில் முன்னேற்றம் உண்டு. செவ்வாய் மற்றும் சனி பகவானை வழிபாடு செய்வது சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார வளர்ச்சியில் இருந்த தடைகள் படிப்படியாக நீங்கும். உயர் அதிகாரிகளின் பழக்கவழக்கத்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை கடுமையாக முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள், இப்போது எளிதில் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்கும் முயற்சி கைகூடும். மொத்தத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும் நேரம் இது.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. ஆனால் உங்களைப் பொறுத்தவரை செவ்வாய் உங்கள் ராசிநாதனாக மட்டுமின்றி, அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத சில மாற்றங்கள் வந்துசேரும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர - சகாய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதி புதன் என்பதால், இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் தோன்றும். தாய்வழி ஆதரவு உண்டு. தடைப்பட்டு வந்த காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். 'இடம், பூமி வாங்க வேண்டும், மனைகட்டிக் குடியேற வேண்டும்' என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 20, 21, 25, 26, ஆகஸ்டு: 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    2025 ஆனி மாத ராசிபலன்

    பிறருக்கு உதவும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

    ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை சனி மற்றும் ராகு மீது பதிவதால் சொத்துக்களால் பிரச்சினையும், சொந்தங்களால் மனநிம்மதி இழப்பும் ஏற்படலாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். கருத்து வேறுபாடுகளும், பணப் போராட்டமும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரமிது. பிள்ளைகள் சம்பந்தமாகவும் விரயங்கள் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்து செய்வதன் மூலமே ஓரளவு நன்மைகளைக் காண இயலும்.

    கடக - புதன்

    ஆனி மாதம் 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நீங்கள் எடுத்த முயற்சி ஒவ்வொன்றாக வெற்றிபெறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை அகலும். வீடுகட்ட மற்றும் வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதில் அனுகூலம் ஏற்படும். கேட்ட உதவிகள் கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனத்தை வாங்கும் முயற்சி கைகூடும். கட்டிடப் பணி பாதியில் நிற்கிறதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அது நிறைவேறும். எதிர்மறைச் சிந்தனைகள் அலைமோதும். இந்த நேரத்தில் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.

    ரிஷப - சுக்ரன்

    ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். தனாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். இனத்தார் பகை மாறும். எதில் ஈடுபட்டாலும், வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்துமுடிக்க இயலும். நேசக்கரம் நீட்ட மாற்று இனத்தவர்கள் முன்வருவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. கல்யாண வயதடைந்த பிள்ளைகளுக்கு இதுவரை திருமணம் பேசியும் முடிவாகவில்லையே என்ற கவலை இப்பொழுது அகலும். அதே சமயம் சுக்ரனுக்குரிய சிறப்பு தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் அக்கறை காட்டாத காரியங்களிலும் ஆதாயம் கிடைக்கும்.

    செவ்வாய் - சனி பார்வை

    மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கின்றார். சனியோடு ராகுவும் கூட்டுக்கிரக சேர்க்கையாக இருக்கின்றது. எனவே உத்தியோகத்தில் பிரச்சினைகள் உருவாகும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிதி நெருக்கடியின் காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பிறரை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். கடன் சுமையின் காரணமாக ஒருசிலருக்கு வாங்கிய சொத்துக்களை விற்கும் சூழ்நிலை ஏற்படலாம். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். இதுபோன்ற நேரங்களில் அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய ப்ரீதிகளை முறையாகச் செய்வது நல்லது.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். செயல்பாட்டில் தாமதங்கள் ஏற்படும்.

    இம்மாதம் சூரிய வழிபாடு சுகத்தை வழங்கும்.

    மேஷம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!

    விசுவாவசு வருட புத்தாண்டில் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான், தன ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்ததை சாதித்துக் காட்டும் வல்லமை பெற்ற உங்களுக்கு, தொழில் அபிவிருத்தி, வியாபார முன்னேற்றம், உத்தியோக உயர்வு, குடும்பத்தில் சுப நிகழ்வு, பிள்ளைகளால் மேன்மை ஆகியவை நடைபெறும் நேரம் இது. ஆயினும் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெற்று வலிமை இழந்திருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

    குரு - சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. தன ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்தில் இந்தப் பரிவர்த்தனை நிகழ்வதால், குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வருமானம் திருப்தி தரும். அதே நேரம் விரயங்களும் அதிகரிக்கும். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.

    கும்ப -ராகு, சிம்ம -கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உற்சாகம் தரும். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். நீண்ட நாட்களாக பேசிய பிறகு விட்டுப்போன திருமணம், இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியைத் தரலாம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரம் செய்வதன் மூலம் மேலும் நன்மைகளைப் பெறலாம்.

    மேஷ - புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத - ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கலாம். பழைய கடன்களை பைசல் செய்து மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே திருமணத் தடை அகலும். மங்கல நிகழ்ச்சி இக்காலத்தில் நடை பெறும். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும். இக்காலத்தில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவைப் பலப்படுத்த குருவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ- மாணவியர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 18, 19, 20, 21, 25, 30, மே: 1, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்

    மேஷம்

    2025 பங்குனி மாத ராசிபலன்

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாதத் தொடக்கத்தில் பலம்பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் குரு வீற்றிருந்து சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெறுகிறார். எனவே பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும்.

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்போது துரிதமாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். விரய ஸ்தானம் பலம்பெறுவதால் வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக உங்களுக்கு நற்பலன்கள் வந்து சேரும். பொதுவாக உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதியான புதன் 12-ல் மறையும் பொழுது 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அடிப்படையில், எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. வருமானம் உயரும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. 'புத - சுக்ர யோகம்' இருப்பதால், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மீன ராசியில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, அதிசாரமாக கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி புதன், லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    ஒரு சிலர் உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். திடீர் பயணங்கள் அனுகூலமானதாக அமையும். பொதுவாழ்வில் இருப் பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

    மீன - சுக்ரன் வக்ரம்

    மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குருவான சுக்ரன் வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் என்பதால், கலகலப்பான குடும்பத்தில் சலசலப்பு உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள்.

    கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உண்டு. நிலைமை சீராக சுக்ரன் அருளும் தலங்களுக்குச் சென்று வருவதோடு, குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.

    கடக - செவ்வாய்

    பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் உங்கள் ராசிநாதன் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே உடல்நலத்தில் மிகமிக கவனம் தேவை. கை வலி, கால் வலி, மூட்டு வலி என்று ஏதாவது ஒரு தொந்தரவு வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. அதேநேரம் அஷ்டமாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சகோதர வர்க்கத்தினரால் நன்மை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க பயிற்சி தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 22, 23, 27, 28, ஏப்ரல்: 2, 3, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    2025 மாசி மாத ராசிபலன்

    நல்ல சிந்தனையும் தியாக உணர்வும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருந்தாலும் மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் பலம்பெறும் இந்த மாதம் யோகமான மாதம்தான்.

    தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனாதிபதியின் பரிவர்த்தனையால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும்.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியனும், சனியும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். பஞ்சமாதிபதி சூரியனும், லாபாதிபதி சூரியனும் லாப ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றிருப்பது நன்மைதான். பகைக் கிரகமாக இருந்தாலும் ஒரு சில வழிகளில் நல்ல மாற்றங்களைக் கொடுக்கும். குறிப்பாக படித்து முடித்த பிள்ளைகளின் உத்தியோகத்திற்காக ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும்.

    அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்துசேரும். வருங்காலம் நலமடைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இருந்தாலும் இடையிடையே சிறுசிறு தடங்கல்கள் வரலாம். இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடிவரும். வெளிநாட்டு அழைப்புகளைப் பற்றி சிந்திப்பீர்கள்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் பலம்பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது, எல்லா வழி களிலும் நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

    தொழிலில் இருந்து வரும் பணியாளர் தொல்லை அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வழக்குகள் சாதகமாகும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறும் இந்த நேரம் நல்ல நேரம்தான். நினைத்தது நிறைவேறும். நேசக்கரம் நீட்ட உறவினர்கள் முன்வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். இதுவரை உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்களும், உடன்பிறப்புகளும் இப்பொழுது மீண்டும் வந்திணைவர்.

    வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சிகள் வெற்றிகரமாக அமையும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். கலைஞர்களுக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 23, 24, 28, மார்ச்: 1, 6, 7, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மேஷம்

    2025 தை மாத ராசிபலன்

    மேஷம்

    மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மேஷ ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அவரோடு இணைந்திருக்கும் சந்திரன், 'சந்திர- மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். லாப ஸ்தானத்தில் உள்ள சனி, தனாதிபதியான சுக்ரனோடு சேர்ந்திருப்பதால் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழில் முன்னேற்றமும், புதிய ஒப்பந்தங்களும் எதிர்பார்த்தபடியே அமையும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். மாதத்தின் பிற்பாதியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து உற்சாகப்படுத்தும்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே உடன்பிறப்புகள் வழியே, சில விரயங்கள் ஏற்படலாம். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஓய்வில்லாமல் பணிபுரியும் சூழல் உருவாகும். தொழிலில் பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வது அரிது. கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவடையாமல் தாமதப்படலாம். இக்காலத்தில் அங்காரக வழிபாடு அவசியம் தேவை.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். இதனால் ஜீவன ஸ்தானம் பலமடைகிறது. எனவே 'உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சுய தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், எதையும் கொஞ்சம் யோசித்து செய்வதே நல்லது. புதியதாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப காரியங்களுக்கு உதவி செய்வீர்கள்.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதன், லாப ஸ்தானத்திற்கு செல்வது ஒரு பொன்னான நேரமாகும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தாலும், அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தை லாபம் தரும் விதத்தில் அமையும். திட்டமிட்ட பல காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும் நேரம் இது.

    குரு வக்ர நிவர்த்தி

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். நவக்கிரகத்தில் சுபக்கிரகமாக விளங்கும் குரு பகவான் வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானாதிபதியானவர் குரு என்பதால், இக்காலத்தில் நல்ல சம்பவங்கள் பல நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வெளிநாட்டு வர்த்தகம் ஆதாயம் தருவதாக அமையும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவு நனவாகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 14, 16, 27, 28, பிப்ரவரி: 1, 2, 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மேஷம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். சென்ற மாதத்தில் தேங்கிய சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். தொழில் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால், தொழில் முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்களில் லாபம் ஏற்படும். அதே நேரம் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    செவ்வாய் - சுக்ரன் பார்வை

    மாதத் தொடக்கத்தில் கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனை சப்தம பார்வையாகப் பார்க்கிறார். கும்ப ராசிக்கு சுக்ரன் சென்றபிறகும், அவரை அஷ்டமப் பார்வையாக செவ்வாய் பார்க்கிறார். எனவே இந்த மாதம் முழுவதுமே செவ்வாய் - சுக்ரன் பார்வை இருக்கிறது. உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், களத்திரம் ஆகியவற்றிற்கு அதிபதியானவர் சுக்ரன். அவரை மங்களகாரகனான செவ்வாய் பார்ப்பதால், குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். புத்திரப் பேறுக்காகக் காத்திருக்கும் தம்பதிக்கு நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் சூழ்நிலையும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், பாக்கியாதிபதியாகவும் விளங்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். எனவே நன்மையும், தீமையும் கலந்த பலன்களே நடைபெறும். குறிப்பாக விரயாதிபதி வக்ரம் பெறுவதால் விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும். அதே நேரம் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

    'பெற்றோர் தன்னிடம் காட்டும் பாசத்தைவிட மற்ற சகோதரர்களிடம் காட்டும் பாசம் அதிகமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உடன்பிறப்பு களின் அனுசரிப்பு குறையலாம். யோசித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது பொருளாதார நிலை உச்சத்தை எட்டும். கொடுக்கல் - வாங்கலில் சரளநிலை உருவாகும்.

    கைமாற்றாகவோ, கடனாகவோ வாங்கிய தொகையைக் கொடுத்து மகிழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு தானாகவே வரலாம்.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ல் சஞ்சரிக்கும் போது, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் இப்பொழுது தானாக வந்துசேரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ-மாணவி களுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 18, 19, 30, 31, ஜனவரி: 4, 5, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    மேஷம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே எல்லா காரியங்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    மருத்துவச் செலவுகளும், மற்ற வழிகளில் வீண் விரயங்களும் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை வரலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வரவு திருப்தி தரும். என்றாலும் செலவு இருமடங்காகும்.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியானவர், குரு. விரயாதிபதியான அவர் வக்ரம்பெறுவது நன்மைதான். என்றாலும் பாக்கியாதிபதியாகவும் அவர் விளங்குவதால், ஒருசில காரியங்களில் தடை, தாமதம் வரத்தான் செய்யும்.

    பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை. உற்றார், உறவினர்களின் பகை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பொறுப்பு சொல்வதால், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதி பதியானவர், சனி பகவான். அவர் சிறப்பாக செயல்பட்டால்தான் தொழில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கும். ஆனால் பகைக் கிரகமான செவ்வாயின் பார்வையால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    ஒருவரையும் நம்பி செயல்பட இயலாது. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். தன்னம்பிக்கை மட்டுமல்லாது, தெய்வ நம்பிக்கையும் அதிகம் தேவைப்படும் நேரம் இது. பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள், உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் முன்வருவர். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

    'புதிதாக முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவியும், எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். 'நினைத்ததை சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் மேலோங்கும்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். செவ்வாய், உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் சில இடர்பாடுகள் நீங்கும். நீண்டநாட்களாக கைகூடாத காரியங்கள் கைகூடும். கடன்சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் நற்பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்கள் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். உடல்நலனில் கவனம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 16, 17, 20, 21, 22, டிசம்பர்: 2, 4, 8, 9, 13,14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ×