ஆன்மிக களஞ்சியம்

தமிழ்க் கடவுள் முருகன்

Published On 2023-10-25 12:17 GMT   |   Update On 2023-10-25 12:17 GMT
  • முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.
  • உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும்.

ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.

ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன்.

அதனால் முருகனைக் "குறிஞ்சிக் கிழவன்" "மலைகிழவோன்" என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு.

மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

"முருகு" என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு.

"மு" என்பது திருமாலையும் "ரு" என்பது சிவபெருமானின் அம்சத்தையும் "க" என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும்,

தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும்,

தனி நிலை எனப்படும் ஆய்தமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு,

தமிழ் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும்,

இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

முருகனை வணங்கினால் எல்லாக் கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

மகனுக்கு செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவ பெருமானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால்

சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால்

தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

முருகன் தன் பக்தர்கள் வேண்டும் கோரிக்கைகளை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்து அருளும் தன்மை வாய்ந்தவன்.

முருகனை அடைந்தால் அவன் நம் துன்பத்தை அழிப்பான்.

முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என எப்போதும் கூறித் தியானிப்பவர்கள்

என்றும் குறையாத பெரும் செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருேபாதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

Tags:    

Similar News