ஆன்மிக களஞ்சியம்

வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் முறை...

Published On 2023-06-26 15:56 IST   |   Update On 2023-06-26 15:56:00 IST
  • பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.
  • பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.

மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.

அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.

அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.

மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.

தர்ப்பண பூஜை

தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.

நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசி அளிப்பார்கள்.

தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு.

ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

Tags:    

Similar News