ஆன்மிக களஞ்சியம்

அழகு, அமைதி தவழும் புதுச்சேரி

Published On 2023-07-30 06:50 GMT   |   Update On 2023-07-30 06:50 GMT
  • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
  • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

Tags:    

Similar News