சினிமா

நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி

Published On 2017-01-24 16:44 GMT   |   Update On 2017-01-24 16:44 GMT
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

காமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி, 1965-ம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் -நடிகை என்ற முறையில் `ஹலோ' சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய, நட்பு ஆனது.

5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு, திருமணத்தில் முடிந்தது. 1970-ம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார், மூர்த்தி.

இதுபற்றி வெண்ணிற ஆடை மூர்த்தி இப்படிச் சொன்னார்:

"பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம். சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.

மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

திருமணத்துக்கு முன்னதாக, எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். நடிகர்கள் ஜெமினிகணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள். நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.

நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ளமாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி, எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.

திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு `மனோ' என்று ஒரே மகன். என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி, குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக்குழந்தையும் உண்டு.

மனோவின் மனைவி சபிதா, கம்ப்ïட்டர் என்ஜினீயர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவர். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.

மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா -மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட, ஒரு சின்ன தப்புகூட அவனைப்பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட, உடனே போன் பண்ணி `இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்' என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.

மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருஷத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், "அப்பா! அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா'' என்றான். எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது. "அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா... எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்'' என்றேன். நான் இப்படிச் சொன்னபோது, அவனும் கண் கலங்கிவிட்டான்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை, டைரக்டர் கே.பாலசந்தர் "சிந்து பைரவி'' படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வர்ற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலசந்தரின் "சஹானா'' சீரியலிலும் நடிச்சாங்க. இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட, என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க.''

இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.

மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும், மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

வைஜயந்தி மாலா நடித்த "வாழ்க்கை''யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சேர்ந்து "எல்லைக்கோடு'' படத்தில் காமெடி செய்திருக்கிறார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று பரிமாணங்களிலும் வெளிப்பட்டவர். அவருடனும் "சமையல்காரன்'' படத்தில் நடித்தார், மூர்த்தி.

டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் `சித்ராலயா' என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார். இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார், மூர்த்தி.

3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார், மூர்த்தி.

வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

"தமிழ் செழிப்பான மொழி. ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும். ஏற்றி, இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டு புரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.

"எப்படி பார்க்கிறது? பட்ஜெட் சொல்லுங்க'' என்கிறார், புரோக்கர். `சின்ன வீடா' இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர். அவர் "சின்னவீடு'' என்பதை தனது பட்ஜெட் அடிப்படையில் சொன்னார். இதுவே `சின்னவீடு' என்ற வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?

அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக, அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும், நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும். நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே.''

இவ்வாறு கூறினார், வெண்ணிற ஆடை மூர்த்தி. 

Similar News