search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருநள்ளாறு சென்றாலும்,திருவாரூர் செல்ல வேண்டும்!
    X

    திருநள்ளாறு சென்றாலும்,திருவாரூர் செல்ல வேண்டும்!

    • தேவர்கள் பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை மானிடனுக்கு தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
    • முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.

    திருநள்ளாறு சென்றாலும்...

    திருவாரூர் செல்ல வேண்டும்!

    ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது.

    அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.

    அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?" எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தை கேட்டார்.

    தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

    தேவ சிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

    முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.

    வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.

    அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.

    இவை "சப்தவிடங்கத்தலங்கள்" எனப்படுகின்றன. "சப்தம்" என்றால் ஏழு.

    திருவாரூரில் "வீதி விடங்கர்," திருநள்ளாறில் "நகர விடங்கர்," நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்," திருக்குவளையில் "அவனி விடங்கர்," திருவாய்மூரில் "நீலவிடங்கர்," வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்," திருக் காரவாசலில் "ஆதி விடங்கர்" என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

    இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோவில்களில் சுவாமியை "தியாகராஜர்" என்பர்.

    சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான்.

    பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர்.

    சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது" என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களைக் காப்பாற்றினார்.

    எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன.

    கிரகங்கள் பக்தர்களுக்குத் தொல்லை கொடுக்கிறதா என்பதைக் கண்காணிக்க விநாயகர் சிலை, கிரகங்களின் சன்னதியில் உள்ளது.

    எனவே தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்" என்பார்கள்.

    Next Story
    ×