search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்!
    X

    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்!

    • ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.
    • பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று.


    மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்!

    புராண வரலாறு

    தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர்.

    அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது.

    அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

    பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்கலாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது.

    இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள்.

    தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான.

    தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.

    பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான்.

    ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான்.

    ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது.

    அப்பர் தேவாரத்தில் "கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே" என போற்றுகிறார்.

    நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

    இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது.

    செவ்வாய்ப்பகவான் வழிபட்டதோடு அவரது அதி தேவதையாகிய முருகப்பெருமான் இங்கு வழிபட்டு வில் பெற்ற சிறப்புத்தலமும் ஆகும்.

    எனவே இத்திருத்தலம் செவ்வாய்த் தோஷ பரிகாரத்துக்கு சிறப்பான ஒரு தலமாகும்.


    Next Story
    ×