search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மங்கல சின்னங்களில் அன்னை
    X

    மங்கல சின்னங்களில் அன்னை

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    Next Story
    ×