search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    லட்சுமி  இருக்கும்  இடங்கள்
    X

    லட்சுமி இருக்கும் இடங்கள்

    • ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.
    • வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.

    சுமங்கலிகள், பூரண கும்பம் மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை,

    திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில்

    மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம்,

    சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

    தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும்,

    கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

    வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.

    ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.

    அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.

    அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

    ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம்.

    ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.

    வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்.

    இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

    நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது.

    அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை "ஹரி பலம்" என்று கூறுவர்.

    நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.

    இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பதும் விசேஷம்.

    மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

    பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது.

    குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.

    மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.

    அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள்.

    திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது.

    திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம்.

    ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள்.

    இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.

    Next Story
    ×