search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கங்கை அவதாரத்திருநாள்
    X

    கங்கை அவதாரத்திருநாள்

    • கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான்.
    • பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, “கங்கைத் தாயே” எனக் கூறி மனமார வணங்குகின்றனர்.

    புண்ணியம் தழைக்கச் செய்வது கங்கை நதி, தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள்.

    மகிமை வாய்ந்த கங்கை அவதார கொண்டாடும் திருவிழாவை சங்கா தசரா என்பர். மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலுக்கு பகீரதப்பிரயத்தனம் என்பார்கள்.

    கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான்.

    முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான்.

    அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து முடிவில் பகீரதன் அதை முடித்தான். எனவே தான் கடினமான வேலை செய்வதை பகீரத பிரயத்தனம் என்கிறோம்.

    இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10ஆம் நாளில் தான் அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள் பாஹரதசமியாகும்.

    இதையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    காசி, அகமதாபாத்தில் மக்கள் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் நீங்கும், பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, "கங்கைத் தாயே" என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர்.

    பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர்.

    தொட்டு வணங்கி தலையில் தெளித்துக் கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக் குளிக்கின்றனர்.

    நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம் விடுகின்றனர். அதன்பின் நீரில் அடியில் உள்ள மண்ணை எடுத்து வணங்குகின்றனர்.

    மாலையில் நதி ஓரம் முழுவதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள்.

    நதி ஓர கடைகளில் இலையால் செய்த சிறுபடகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.

    நதி நீரில் முதலை முதுகில் வெண்தாமரை அம்மலர் மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை நீர்க்குடம் ஏந்தி இருகைகள் அபயவரத ஹஸ்தமாக புன்னகையுடன் அமர்ந்து காட்சி தருகின்றாள்.

    தலைகிரீடத்தில் பிறைச்சந்திரனைக் காணலாம்.

    கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவை மனதில் உருவகப்படுத்தி, கங்கையின் திருநாமம் கூறிக்கொண்டு,

    ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை "கங்கை ஜமாக" என்று பூஜித்து வணங்கினால் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிடைக்கும்.

    Next Story
    ×