search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பெரியபாளையத்தம்மன் வழிபாடுகள்
    X

    பெரியபாளையத்தம்மன் வழிபாடுகள்

    • பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.
    • அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள்.

    தேங்காய் உருட்டும் பிரார்த்தனை

    அங்க பிரதட்சணம் செய்வதை நீங்கள் எல்லா கோவில் களிலும் பார்த்து இருப்பீர்கள். அந்த பிரார்த்தனையை பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் சற்று மாறுபட்டு செய்கிறார்கள்.

    அதாவது தாங்கள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பதில் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம்போல தேங்காயை உருட்டி விடுகிறார்கள். இந்த பிரார்த்தனையில் ஈடுபடுபவர்கள் ஈரத்துணியுடன் பவானி அம்மனை வணங்கி விட்டு தேங்காயை உருட்டி விடுவார்கள். அந்த தேங்காய் உருண்டு செல்லும்.

    எந்த இடத்தில் அந்த தேங்காய் நிற்கிறதோ, அந்த இடத்தில் பவானி அம்மனை நோக்கி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவார்கள். இப்படி தேங்காயை உருட்டியபடி கோவிலைச் சுற்றி வருவார்கள். இந்த பிரார்த்தனையை `அடிதண்டம்' என்றும் பக்தர்கள் சொல்கிறார்கள்.

    கரகம் பிரார்த்தனை

    நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் பவானி அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகன் கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.

    கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து, தலையில் ஏந்தி கோவிலை சுற்றி வருவார்கள். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பெரியபாளையத்தம்மனை குல தெய்வமாக கருதுபவர்களும் இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள்.

    திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை `குடை கல்யாணம்' என்றும் அழைக்கிறார்கள்.

    மஞ்சள் தீர்த்தத்தில் மருந்து

    பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுக்கப்படுவது போல பெரியபாளையத்தம்மன் கோவிலில் மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    இந்த மஞ்சள் தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. பவானி அம்மனின் அருள்பட்ட இந்த மஞ்சள் தீர்த்தம் பிணி தீர்க்கும் மாமருந்து என்றே சொல்லலாம். கோவிலில் அர்ச்சகர் வழங்கும் மஞ்சள் தீர்த்தத்தை பருகினால் நோய்கள் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    அம்மை போட்டவர்கள் இந்த மஞ்சள் தீர்த்தத்தை குடித்தால் மூன்றே நாளில் அம்மை இறங்கி விடும் என்பது கண்கூடு.

    தற்போது பெரியபாளையத்தம்மன் கோவில் கருவறை அமைந்திருக்கும் பகுதியில்தான் பெரியபுற்று இருந்தது என்பதையும், அந்த புற்றை அகற்றும்போது கம்பி பட்டு சுயம்பு காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு வந்ததையும் ஏற்கனவே நீங்கள் படித்து இருப்பீர்கள்.

    அப்படி ரத்தம் வந்தபோது மஞ்சள்தான் வைத்தனர். அதை பக்தர்களுக்கு உணர்த்தவே மஞ்சள் தீர்த்தம் வழங்கப்படுகிறது.

    சுயம்பில் வைத்து எடுத்துத் தரப்படும் மஞ்சளை நாள்பட்ட காயம், புண்களில் வைத்தால், விரைவில் அவை ஆறி குணமாகி விடும். எனவே இந்த மஞ்சள் தீர்த்தத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வதை காணலாம். சென்னையில் இருப்பவருக்கு அம்மை போட்டிருந்தால், இந்த தலத்துக்கு வந்து மஞ்சள் தீர்த்தம் வாங்கி சென்று பயன்பெறுவது மரபாக உள்ளது.

    தாலி தரும் பிரார்த்தனை

    பெரியபாளையத்தம்மன் ஏழைகளின் வீட்டு தெய்வமாவாள். குறிப்பாக மீனவ சமுதாய மக்களின் குலதெய்வமாக திகழ்ந்து, அம்மக்கள் அனைவரையும் பாதுகாத்து வருகிறாள்.

    பொதுவாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் அலை, சூறைக்காற்று போன்றவைகளை எதிர்கொண்டு சமாளித்து மீன்பிடித்து வரவேண்டும். மீன்வளம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்கள் சில நாட்கள் கழித்தே கரை திரும்புவார்கள்.

    இப்படி கடலுக்குள் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்று மீனவப் பெண்கள் பவானி அம்மனை நினைத்து மனதார வேண்டிக் கொள்வார்கள். அதற்கு நன்றி காணிக்கையாக தங்களது தாலிக்கொடியையே அப்படியே பெரியபாளையத்தம்மன் கோவில் உண்டியலில் போட்டு விடுவார்கள்.

    ஆடி மாத விழா காலத்தில்தான் மீனவப் பெண்கள், இந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குறிப்பாக 3-வது வாரம், 5-வது வாரம், 7-வது வாரம் அல்லது 9-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை மீனவப் பெண்கள் இந்த பிரார்த்தனையை செய்வதுண்டு.

    இதன் காரணமாக ஆடி மாதம் முழுவதும் உண்டியலில் தாலி காணிக்கை மிகுதியாக இருக்கும். வேப்பஞ்சேலை பிரார்த்தனை போலவே இந்த பிரார்த்தனையும் இந்த ஆலயத்துக்குரிய ஒன்றாக தனித்துவத்துடன் உள்ளது.

    சென்னையில் காசிமேடு பகுதி மீனவர்கள் ஏராளமானோர் பெரியபாளையத்துக்கு வந்து இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள். வட தமிழ்நாட்டின் கடலோர பகுதி மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பெரியபாளையத்தம்மனை குலதெய்வமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×