search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அனுமனை பற்றிய பல செய்திகள்
    X

    அனுமனை பற்றிய பல செய்திகள்

    • வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.
    • ராம நாமம் சொன்னால் பாவம் தீரும்.

    ராமா, ராமா

    அனைத்து கிரக தோஷங்களுக்கும் அனுமனை வழிபடுகிறோம். அவருக்கு ராம நாமம் பிடிக்கும். ராமா, ராமா என்று தினமும் சொல்லுங்கள், அனுமத் ஜெயந்தியன்று ஸ்ரீராம ஜெயத்தை நாவினிக்க சொல்லுங்கள். அவரருள் உடன் கிட்டும்.

    எந்த கிழமையில் என்ன செய்வது?

    திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம்.

    அனுமனும் ராமனும்

    அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.

    சங்கு சக்கர ஆஞ்சநேயர்

    காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில், சுவாமி சந்நிதி எதிரே ஆஞ்சநேயர் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாறுபட்ட கோலமாகும்.

    ராம பாராயண ஆஞ்சநேயர்

    ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன் வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

    அனுமனை வணங்குவதன் பலன்

    அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.

    கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்

    அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.

    கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேய புராணம் என்ற துதிபாடி இழந்தபார்வையை மீண்டும் பெற்றார்.

    பெருமாள் அருகில் அனுமன்

    ராமர் அருகில் மட்டுமில்லாமல், தேனி அருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில், பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.

    கீதைக்கு உரை எழுதியவர்

    கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர். "பைசாசம்' என்ற மொழியில், ஆஞ்சநேயர் கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.

    இலக்கண பட்டதாரி

    சிறந்த கல்விமானான அனுமனை, "நவ வ்யாகரண வேத்தா' என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.

    ஒரே சிலையில் மூன்று வடிவம்

    உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கிஆஞ்சநேயர் கோயிலில், காலையில்அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.

    வீரமங்கள ஆஞ்சநேயர்

    நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார்.

    துஷ்ட நிக்ரஹ அனுமான்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

    ஊருக்கு ஒரு பெயர்

    அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா, ஆந்திராவில் ஆஞ்சநேயலு, மகாராஷ்டிராவில் மாருதி, சில வட மாநிலங்களில் மகாவீர் என்று அழைக்கின்றனர்.

    கெடாத வடைமாலை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.

    வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்

    ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.

    ராமநாம மகிமை

    ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்.

    Next Story
    ×