search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மீனவ மக்களின் 4 நாள் வழிபாடு
    X

    மீனவ மக்களின் 4 நாள் வழிபாடு

    • தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள்.
    • சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது.

    வட தமிழ் நாட்டின் கடலோரத்தில் வாழும் மீனவ சமுதாய மக்கள் ஆண்டுக்கு ஒரு தடவை ஆடி மாத விழாவின் போது பெரிய பாளையம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காகவும், நிறைய மீன் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் இந்த சிறப்பு வழிபாட்டை மீனவர்கள் நடத்து கிறார்கள்.

    இந்த வழிபாட்டுக்கு காசிமேடு உள்பட கடலோரப்பகுதி மீனவர்கள் குடும்பம், குடும்பமாக பெரியபாளையம் தலத்துக்கு செல்வார்கள் மற்ற பக்தர்கள் போல அவர்கள் ஒரு நேரம் மட்டும் தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து விட மாட்டார்கள்.

    4 நாட்கள் பெரியபாளையத்தில் தங்கிருந்து,பவானி அம்மனின் அருள் பார்வை தங்கள் மீது படும் வகையில் வழிபாடுகளை செய்த பிறகே வீடு திரும்பி வருவார்கள்.

    வீட்டில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு செல்லும் மீனவர்கள் வெள்ளி, சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்கள் பெரியபாளையம் ஆரணி ஆற்றில் குடில்கள் அமைத்து தங்குவார்கள். அங்கிருந்த படி பொங்கல் வைத்து சாப்பிட்டு பவானியம்மனை வணங்கி செல்வார்கள்.

    மீனவ குடும்பத்து பெண்கள் தங்கள் தாலி சரடை கழற்றி உண்டியலில் போட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். 4 நாள் மனம் குளிர வழிபட்ட பிறகு செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பவானி அம்மனை வணங்கி விடைபெற்று செல்வார்கள்.

    பரசுராமர் பாவம் தீர வழிபட்ட தலம்

    முனிவர் ஜமத்கனி உத்தரவை ஏற்று தன் தாய் ரேணுகாதேவியை பரசுராமர் வெட்டி கொன்ற தகவலை முன்பக்கங்களில் படித்து இருப்பீர்கள். தாயை கொன்றதால் பரசுராமருக்கு தோஷமும், பாவமும் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பரசுராமர் பல்வேறு தலங்களுக்கு சென்றார்.

    இறுதியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருள்மிகு ஆலந் துறையார் (வடமூலநாதர்) என்ற தலத்தில் தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது. இத்தல சிவனுக்கு சாம்பிராணத்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.

    பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் `பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.

    சில சிவன் கோவில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி சிற்பகம் அமைத்திருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதை காணலாம்.

    இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மகக்தி தோஷம் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

    தோஷம் போக்கும் சென்னை ரேணுகா பரமேஸ்வரி ஆலயம்

    சென்னையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. முக்கியமாக மாரியம்மன் ஆலயங்கள் ஆங்காங்கே உள்ளன.அதில் ஒன்று சின்னக்கடை மாரியம்மன் அல்லது ரேணுகாதேவி ஆலயம், மின்ட் சாலையும் என்.எஸ்.ஜி. போஸ் சாலையும் இணைக்கும் இடத்தின் அருகில் உள்ள அந்த ஆலயம் 250 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

    அந்த ஆலயத்தின் தேவி மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். அதற்கு காரணம் ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் சீதளாதேவி என்ற பெயரில் முழு உருவை கொண்டும் ரேணுகாதேவி என்ற பெயரில் தன்னுடைய தலையை மட்டுமே பூமிக்கு மேல் வைத்துள்ள நிலையிலும் அம்மன் காட்சி தருகிறார்.

    அந்த ஆலயத்தில் சென்று எலுமிச்சை பழ மாலையுடன் மிளகாயை சேர்த்துக் கட்டி தேவிகளை பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகள் இருந்தால் அவை அனைத்தும் ஓடி ஓளியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல படைவீடு தலத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயமும் மிகவும் புகழ் பெற்றதாகும்.

    Next Story
    ×