search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!
    X

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!

    • அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.
    • தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    365 லிங்கங்கள் கொண்ட பிரமாண்ட ஆலயம்!

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம்.

    இந்தக் கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

    பெரும்பாலான கோவில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.

    ஆனால், திருவாரூர் கோவிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோவில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

    வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரௌவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர்,

    தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோவில், தெய்வேந்திரன் பூஜித்த இலிங்கம், சேரநாதர், பாண்டியநாதர்,

    ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

    கோவிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.

    இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

    மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது.

    "செங்கழுநீர் ஓடை" எனப்படும் ஓரோடை கோவிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    தியாகராஜர் என்றால் "கடவுள்களுக்கெல்லாம் ராஜா" என்று பொருள்.

    தியாகராஜர் கோவிலும் கோவில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

    9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள்,

    365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

    இக்கோவிலை பெரியகோவில் என்றும் சொல்வர்.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

    இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க இலிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

    அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த இலிங்கம் வைக்கப்படும்.

    அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

    மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.

    Next Story
    ×