search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன.

    இதற்கிடையே, ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. புனே மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது லெக் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



    சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியின் முதல் லெக் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவா இடையிலான இரண்டாவது லெக் போட்டி இன்று சென்னையில் நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 26-வது நிமிடம் சென்னை அணியின் ஜேஜே முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 29-வது நிமிடம் சென்னையின் தனபால் கணேஷ் கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்ட முடிவில் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கோவா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளையும் சென்னை அணியின் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்தார். ஆட்டத்தன் 90-வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜேஜே மீண்டும் ஒரு கோல் அடித்தார். கோவா அணி இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இறுதியில், சென்னையின் எப்.சி. 4-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வருகிற 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி. - சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL #FCGoa #ChennaiyinFC #tamilnews
    Next Story
    ×