search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால்
    X

    முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால்

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசிய நோ-பால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார். ஆனால் சாஹல் க்ரீஸ்க்கு வெளியே கால் வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. 7 ரன்னில் இருந்து தப்பித்த மில்லர், ஹர்திக் பாண்டியாவின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். அத்துடன் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்தார்.

    மில்லர் அவுட்டில் இருந்து தப்பியது போது தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. இதுதான் போட்டியை போக்கையே மாற்றியது. மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்திருக்கும். முக்கியமான போட்டியில் நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோய் உள்ளது.

    நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது இது முதன்முறையல்ல. இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. கெய்ல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாமுவேல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு சார்லஸ் உடன் லென்டில் சிம்மன்ஸ் ஜோடி சேர்ந்தார்.



    7-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் லென்டில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ-பால் என்பதால் லென்டில் சிம்மன்ஸ் தப்பித்தார். அப்போது 12 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 13.1 ஓவரில் 144 ரன்கள் தேவைப்பட்டது. அவுட்டில் இருந்து தப்பிய லென்டில் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார்.



    மீண்டும் 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதும் நோ-பால் என்பதால் தப்பித்தார். இரண்டு முறை தப்பித்த சிம்மன்ஸ் 51 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு துணையாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த தோல்வியால் டோனி மிகவும் விரக்தியடைந்தார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. 4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    ஆனால் பும்ரா அதை நோ-பால் ஆக வீசியதால் பகர் சமான் தப்பித்தார். பின்னர் 106 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்து முதன்முறையாக சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.

    இப்படி முக்கியமான போட்டிகளில் நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோய் உள்ளது. இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×