search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது- உபரி நீர் திறப்பு
    X

    முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது- உபரி நீர் திறப்பு

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதையடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. #MullaperiyarDam
    திருவனந்தபுரம்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

    இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. கடந்த 28-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. அதன்பிறகு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதோடு, மழைப் பொழிவும் குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 377 கன அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 16,629 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும். #KeralaRains #MullaperiyarDam
    Next Story
    ×