search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மகாராஷ்டிராவில் கைது
    X

    பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவர் மகாராஷ்டிராவில் கைது

    கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த பரசுராம் என்பவரை சிறப்புப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GauriLankesh
    பெங்களூர்:

    பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி இரவு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரது வீட்டு சிசிடிவி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய புள்ளியான மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

    புலனாய்வு குழுவினர் விசாரித்தபோது அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த வலதுசாரி பங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர்.

    நவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கொல்லேகால் காட்டுப் பகுதியில் 4 பேரை காரில் அழைத்து வந்து சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்தார். 4 பேரும் இந்தி பேசும் வாலிபர்கள் என்றும் தெரிவித்தார். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மும்பை மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மராட்டிய வாலிபர் ஒருவர் சிக்கினார். பரசுராம் வாக்மரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்டவருக்கு கொலையில் முக்கிய பங்கு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். #GauriLankeshmurder
    Next Story
    ×