search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை துரோகி என்று கூறும் தினகரன் பெரிய தியாகியா? - ஓ.பன்னீர்செல்வம்
    X

    என்னை துரோகி என்று கூறும் தினகரன் பெரிய தியாகியா? - ஓ.பன்னீர்செல்வம்

    மன்னார்குடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், என்னை துரோகி என்று கூறிய டிடிவி தினகரன் என்ன பெரிய தியாகியா? என்று ஆவேசமாக கேள்வு எழுப்பினார். #OPanneerselvam
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் காவிரியில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்த முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வழிநிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சாதனைகளை விளக்கியும் மன்னார்குடியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். எம்.பிக்கள் டாக்டர். கோபால், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் வரவேற்றார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-


    காவிரி பிரச்சினை தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இந்த பிரச்சினையை கையாண்டுள்ளன. ஆனால் யாருடைய ஆட்சியில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என நாம் அறிந்து கொள்வது அவசியம்.

    அ.தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தான் சட்ட போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை மீட்டு தந்தார். காவிரி பிரச்சினை பல்வேறு கால கட்டங்களை கடந்து இடைக்கால தீர்ப்பிற்கு பிறகு 2007-ல் இறுதி தீர்ப்பு வந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. தி.மு.க அப்போது மத்திய அரசிலும் கூட்டணியில் இருந்தது.

    ஆனால் கருணாநிதியால் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட முடியவில்லை. 2011-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பின்பு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் நேரிடையாகவும், கடிதம் மூலமாகவும் ஜெயலலிதா பலமுறை அரசிதழில் வெளியிட வேண்டுகோள் விடுத்தார். அது நடக்காததால் சட்ட போராட்டம் நடத்தி 2013-ல் அரசிதழில் வெளியிட செய்தார்.

    பின்னர் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்போது ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அரசு, காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க தீர்ப்பை பெற்றது.

    ஸ்டாலின், 2016-ம் ஆண்டு எப்படியாவது முதல்-அமைச்சர் ஆகி விடவேண்டும் என்று என்னென்னவோ செய்து பார்த்தார். அது நடக்கவில்லை. மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சரானார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை மூன்று, நான்காக உடைத்து பார்த்தாலாவது நாம் முதல்-அமைச்சராக வாய்ப்பு வருமா என ஸ்டாலின் பார்க்கிறார். ஆனால் அ.தி.மு.கவை ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.

    மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய தினகரன் என்னை துரோகி என்று பேசியுள்ளார். தினகரன் என்ன பெரிய தியாகியா? அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்?. என்னை அவர்தான் அறிமுகம் செய்தாராம். அவர் பெரியகுளம் வரும் முன்பே நான் நகர செயலாளர், நகராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டேன். நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார்.

    33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்தோம் என்று கூறுகிறார்கள். இவர்கள்(சசிகலா குடும்பத்தினர்), அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

    என்னை தனியாக அழைத்து நீங்கள் தினகரனிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. தொடர்பு கொள்ள எவ்வித முயற்சியும் செய்ய கூடாது என கட்டளையிட்டார்.

    நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டிற்குள் தினகரனை நுழைய விடமாட்டேன் என ஜெயலலிதா கூறினார். தி.மு.க வால் ஜெயலிலதா மீது பழிவாங்க போடப்பட்ட 13 வழக்குகளில் தன்னை மட்டும் விடுவித்துக் கொண்டவர் தினகரன். அ.தி.மு.க வில் உரிமை கொண்டாடுவதற்கு இவர் யார்?. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக தினகரன் சதி செய்தார்.

    தினகரன் கட்சி ஆரம்பித்த பிறகு சொந்த மாமன் கூட சண்டை. கூட பிறந்தவர்கள் உடன் சண்டை. இவை எல்லாம் பதவி ஆசையில்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திவாகரன் என்னிடம், நீங்கள் முதல்-அமைச்சராக இருங்கள் என வலியுறுத்தினார். நான் மறுத்தேன். மீண்டும் வலியுறுத்தினார். இவர்களது குடும்பத்தின் குணம் தெரிந்த நான் அவரிடம், நான் மூன்று மாதங்கள் மட்டும் முதல்-அமைச்சராக இருக்கிறேன். பின்னர் நீங்கள் வேறு யாரையாவது மாற்றிக்கொள்ளுங்கள் என கூறினேன். அதன்பிறகு அவர்களிடம் நான் பட்ட கொடுமைக்கு அளவில்லை.

    தினகரன் தானே முதல்வராக கனவு கண்டு என்னை அப்பதவியில் இருந்து நீக்க பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டார். சில மந்திரிகளை கூட அடித்து இருக்கிறார். எங்களுக்கு ரோ‌ஷம் இருந்ததால் வெளியே வந்து தர்மயுத்தம் தொடங்கினோம். .

    எங்கே நான் நிரந்தர முதல்-அமைச்சராக இருந்து விடுவேனோ என பயந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். பிறகு நான் தர்ம யுத்தம் ஆரம்பித்து மூன்று மாதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என்னை புரிந்து கொண்டனர்.

    பின்னர் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒன்றிணைந்தோம். அ.தி.மு.க தொண்டர்கள், நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என விரும்பினார்கள். தினகரன் மட்டும் தான் நாங்கள் ஒன்றிணைவதை விரும்பவில்லை.

    தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுவது பகல் கனவு. ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுகிறார். ஆர்.கே நகர் வெற்றி, 20 ரூபாய் டோக்கனால் வந்த வெற்றி. ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றியது, உலகத்தில் தினகரன் ஒருவர் மட்டும்தான். இந்த ஆட்சியை அகற்றும் தினகரனின் எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் பலிக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #OPanneerselvam #TTVDhinakaran #ADMK
    Next Story
    ×