search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பெறும் மனுக்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி
    • திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

    வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ஜெகந்நாதர் ஆலயக் கருவூலம் தொடர்பாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்து ஒட்டுமொத்த ஒடிசா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதென மக்கள் கூறுகின்றனர்.இதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டுபோனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?" என்று மோடி பேசியுள்ளார். 

    • ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
    • தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்"

    "வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்"

    தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!

    முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

    ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?

    ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?

    தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?

    தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

    தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்!

    வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.

    • மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம்.
    • தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.

    சென்னை:

    மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவையொட்டி அதன் தலைவர் மல்லை சத்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ச் சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் ஆகிய விருதுகளை வழங்கி வரும் மல்லை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொண்டை உளமாரப் பாராட்டுகிறேன்.

    இதுபோன்ற அமைப்புகளால்தான் தமிழின் வேரும், விழுதுகளும் வலுப்பெற்றும், வளம் பெற்றும் யாராலும் வீழ்த்த முடியாத வலிமையுடன் திகழ்கின்றன.

    மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம். அத்தகைய தீரமும், வீரமும் என்றென்றும் குன்றாமல் இருக்க மல்லைத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் அமைப்புகளின் தொண்டறமும், தொடர் பணியும் என்றென்றும் தேவை.

    மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 15-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அன்பர்களுக்கும், விழாவில், "பெருந்தமிழன் விருது" பெறும் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், "பெருந்தச்சன்" விருது பெறும் மரபுக் கட்டிடக் கலைஞர் பா.குமரேசன், மாமல்லன் விருது பெறும் கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் ஆகிய மூன்று பேராளுமைகளுக்கும், இந்த அமைப்பையும், விழாவையும் சிறப்புற நடத்தும் மல்லை சத்யாவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று (20.5.2024) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக்ராஜா (வயது 27) த/பெ.சுப்ரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவநேசன் (வயது 27) த/பெ.பால்ராஜ் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறி, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆனால், தமிழக விவசாயிகளைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.


    ஒரு புறம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை நிச்சயம் கட்டுவோம் என்று கூறியதையும், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணை கட்டுவதையும் தடுக்கவில்லை. தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும், உரிமைகளையும் அடகு வைக்க, திமுக எப்போதும் தயங்கியதே இல்லை.

    ஒவ்வொரு ஆண்டும், காவிரி நீர் மற்றும் மழை நீர் அனைத்தும் தடுப்பணை இன்றி கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன், 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. உண்மையில், கோபாலபுரக் குடும்பத்தின் நலனைத் தவிர, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    உடனடியாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து, சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது கேரள அரசு.
    • இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க அம்மாநில அரசு முயற்சி செய்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனியாவது தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் வாழ விழைகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்டகாலம் நிறைவான வாழ்க்கை வாழ விழைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை-பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும்-அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

    உத்தரபிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.

    மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை-பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

    உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.

    பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

    பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
    • 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.

    இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.

    தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

    பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.
    • தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும்.

    இந்த தேர்தல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.


    கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது.

    புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வார்டு மறுசீமைப்பு பணிகள் முடியாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தினார்.

    சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 2020 ஜனவரி மாதம் பதவி ஏற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2021 அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

    இந்த தேர்தல்கள் 27 மாவட்டங்களுக்கு மற்றும் 9 மாவட்டங்களுக்கு என தனித்தனியாக நடந்ததால் இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் 21 மாதம் உள்ளது.

    இதனால் இந்த வித்தியாசத்தை மாற்றி சீராக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் டிசம்பரில் முடிந்ததும் தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்பு செயல்பாட்டை நீட்டிக்க வேண்டும். இதற்கு சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.


    இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் ஏற்கனவே கொண்டு சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்துள்ளார். அப்போது வெவ்வேறு நிலைப்பாட்டை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதாவது 2019 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கு 2024 டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் 2021 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உள்ளாட்சிகளுக்கு 2026 செப்டம்பரில் தேர்தல் நடத்த வேண்டும்.

    2026 செப்டம்பர் என்பது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு வருவதாகும். அந்த கால கட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் அமையலாம். அல்லது பாதகமாகவும் இருக்கலாம். அந்த சூழல்களை அப்போது தான் கணிக்க முடியும்.

    எனவே தி.மு.க. ஆட்சியிலேயே 27 மாவட்டங்களுக்கும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்தி விடலாமா? என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்து 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழல் அமைந்து விட்டால் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    அவ்வாறு உள்ளாட்சி தேர்தலை நடத்த முற்படும் போது 2026-ல் பதவி காலம் முடியும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு பதவிகளை கலைத்து விட்டு இந்த டிசம்பர் தேர்தலோடு சேர்த்து நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு எடுப்பார் என தெரிகிறது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களிடம் அடுத்து உள்ளாட்சி தேர்தலையும் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். அதிலும் முழுமையாக வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதையும் சட்டசபையில் அமைச்சர்களும் தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×