என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
    • புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

    தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.


    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    • 2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
    • இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதற்கான டோக்கன் வழங்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ. 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 1 முழு நீள கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2.22 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது.
    • நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம்.

    பா.ம.க. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2025-ம் ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, நடந்தவை யாவும் நன்மைக்கே எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை. மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது.

    தர்மம் தாமதிக்கலாம். ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும் என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026- ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும்.

    நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்' என்பதே அந்த நம்பிக்கை.

    இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம்.

    இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும். சேவை மனப்பான்மையோடும் 2016-ஐ பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    இவ்வாறு ஸ்ரீகாந்தி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம்.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது.

    கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானது குறித்து ஆதவ் அர்ஜூனா கூறுகையில் "எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். எங்கள் குடும்பத்தில் 41 பேரை இழந்துள்ளோம். உண்மைக்காக போராடி வருகிறோம்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அறிவில்லாத துறையை கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையை கொடுத்து அரசை அவமானப்படுத்த வேண்டாம்" என்றார்.

    • வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர்.
    • முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் ஆவார்கள்.

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சீர் செய்ய சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் தொடங்கிய இந்த பணி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து பெறப்பட்டன. கடந்த மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த பணி, கடந்த 14-ந்தேதி முடிவடைந்தது. இந்த பணியின் அடிப்படையில் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.

    அதாவது மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் ஆகும்.

    இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6 மற்றும் உறுதிமொழி சான்றிதழ் கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த பணி அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7,35,191 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேட்பாளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 9505 பேர் விண்ணப்பத்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர்.

    • அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட கடந்த 15-ந்தேதி முதல் விருப்பமனு விநியோகம்.
    • இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் சுமார் 9,500 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

    அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று 31-ந்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி விருப்ப மனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. மொத்தம் சுமார் 9,500 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் விரைவில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது
    • தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது

    தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

    "மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ், கோயம்புத்தூரில் வாகனம் மோதியதை தட்டிக் கேட்டதற்காக நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றி வரும் ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் சேரன் மற்றும் சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம் பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

    சமீப நாட்களாக, தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் திமுக-வின் பிரித்தாளும் அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைத் திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது."

    தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்,
    • திருவாரூர், நாகை, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. சூரியன் காலை 7 மணிக்குப் பிறகுதான் தெரிகிறது. இவ்வாறு இருக்கும் நேரத்தில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான அறிகுறியுடன் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவையின் காட் (ghat) பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    • திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை.
    • இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை திமுக அரசு செய்திருக்கிறது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே தொடர்வண்டி நிலையத்தில் ஜமால் என்ற புடவை வணிகர் போதையில் இருந்த 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். ஒரே தொடர்வண்டி நிலையத்தால் அடுத்தடுத்து போதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதும், அத்தாக்குதல்களைத் தடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.

    தொடர்வண்டி நிலையத்தில் தான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கூறி திமுக அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. தாக்குதல் எங்கு நடத்தப்பட்டது என்பது இங்கு சிக்கல் அல்ல. தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது தான் இங்கு பிரச்சினையே. சில நாள்களுக்கு முன் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட வடமாநில இளைஞரும், இப்போது தாக்கப்பட்டுள்ள புடவை வணிகர் ஜமாலும் அப்பாவிகள். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் எந்தத் தூண்டுதலிலும் ஈடுபடவில்லை. மாறாக கஞ்சா போதையில் இருந்தவர்கள் தான் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

    திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இரு தாக்குதல்களுக்கும் காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் கட்டுப்படுத்தப்படாத புழக்கம் தான். அதனால் தான் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக இமாலயப் பொய் ஒன்றை சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதற்கு அடுத்த நாளே இந்த நிகழ்வு நடந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் எங்கும் நிறைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

    திமுகவின் 55 மாத ஆட்சிக்காலத்தில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை; தரமான கல்வி வழங்கவில்லை; அரசு பள்ளிகளையும், கல்லூரிகளையும் வலுப்படுத்தவில்லை; தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்த வேதனையான சாதனையை மட்டுமே திமுக அரசு செய்திருக்கிறது.

    தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவதிலும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும் படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. இளைஞர்களை சீரழித்த, தோல்வியடைந்த திமுக தமிழகத்தை தொடர்ந்து ஆளும் தகுதியை இழந்து விட்டது. இதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள்.

    • போதையில் யார் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
    • ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.

    போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?

    அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?

    "தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?

    போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,

    சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,

    எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?

    நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!

    2026, விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும் என கூறினார்.

    • மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2025-ம் ஆண்டு இன்று இரவுடன் விடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களைகட்டி காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத் துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் இருந்தே இளைஞர்கள் அதற்கு தயாரானார்கள்.

    மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஹேப்பி நியூ இயர் என உற்சாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்கிறார்கள்.

    இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

    நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பை பாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக்ரேசை கட்டுப் படுத்துவதற்காக 30 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு பிறகு சென்னை மாநகரில் உள்ள 30 மேம்பாலங்கள் முழுமையாக மூடப்படுகிறது.

    சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    மெரினாவில் மணல் பரப்பில் இறங்குவதற்கு கூட இன்று இரவு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதைத் தாண்டி யாராவது கடற்கரை மணல் பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட உள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களையும் தயார் நிலையில் பணியமர்த்த உள்ளனர். கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அவசர மருத்துவ உதவிக்காக மெரினாவில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனியார் இடங்களில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் போலீசார் முழுமையாக தடை விதித்து உள்ளார்கள். இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருப்பவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போதை பொருட்களை யாராவது பயன் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை மீறி யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினால் அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது நடைபெறும் மது விருந்துகளை இரவு 1 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்றும், போதையில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பொதுமக்கள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது போதையில் வாகனங்களை ஓட்டினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இப்படி சென்னை, கோவை, திருச்சி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என அனைத்து முக்கிய மாநகர பகுதிகளிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    • சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்
    • கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல

    கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும்விதமாக அமைந்தது பிரவீன் சக்ரவர்த்தியின் தமிழ்நாடு நிலுவைக்கடன் தொடர்பான கருத்து. இவரின் இந்த கருத்து தொடர்பாக விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதனிடையே பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தை தெரிவித்திருந்திருந்தார்.

    தொடர்ந்து இன்றும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. அவர்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என எச்சரிக்கை அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி கூறியதை ஒரு செய்தியில் படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

    ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோல், துரைவைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×