என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர்.
    • தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமாகி இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதற்கிடையே, நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில், 'சரஸ்வதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் வரலட்சுமி சரத்குமார் அறிவித்துள்ளார். படத்தின் பின்னணியில் உள்ள குழுவினரின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இது ஒரு அற்புதமான பயணம்.. என் படப்பிடிப்பில் ஒவ்வொருவருக்கும், என் நடிகர்களுக்கும், என் இயக்குநர் குழுவிற்கும், எனது ஒளிப்பதிவாளர்.. தயாரிப்பு நிறுவனத்தின் ஒவ்வொரு லைட்மேனுக்கும் நன்றி.." என்று கூறியுள்ளார்.

    'சரஸ்வதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள் இனி நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.

    இப்படத்தில் தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த மாதம் 21-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.8 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்தது.

    இந்த நிலையில், 'மாஸ்க்' படத்தை வருகிற 9-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு களிக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது.  

    • இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது.
    • தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார்.

    சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று வெளியான சிறை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    'சிறை ஒரு நல்லப் படம். உண்மையிலேயே பல இடங்களில் என்னை கண்கலங்க செய்தது. படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கிறது. விக்ரம் பிரபு படம் முழுவதும் ஒரு உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்ஷய் குமார் மற்றும் அனிஷாவின் நடிப்பு அந்த கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும், உணர்ச்சிகளையும் அழகாக பிரதிபலித்துள்ளது.

    இந்தச் சிறந்த படைப்பை தந்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறந்த அறிமுகத்தின் மூலம் எங்கள் இதயங்களைச் சிறைபிடித்துவிட்டார். இறுதிச் காட்சியில் சொல்லப்பட்ட செய்தி வலுவானது மற்றும் மிகவும் தேவையானது. தமிழ் சினிமா இந்த ஆண்டை ஒரு மிகச்சிறந்த வெற்றியுடன் நிறைவு செய்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • அமேசான் காடுகளுக்குள் ஒரு டாக்குமெண்டரி படமாக்க குழு ஒன்று பயணிக்கிறது.
    • அமேசான் காடுகளில் வசிக்கும் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு, அந்தக் குழுவின் பயணத்தை மரண பயணமாக மாற்றுகிறது.

    அமேசான் காடுகளுக்குள் ஒரு டாக்குமெண்டரி படமாக்க குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழுவில் இருக்கும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இயற்கை வாழ்வை பதிவு செய்யும் நோக்கத்துடன் காடுகளுக்குள் நுழைகிறார்கள். ஆனால் அந்தப் பயணம் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது.

    அமேசான் காடுகளில் வசிக்கும் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு, அந்தக் குழுவின் பயணத்தை மரண பயணமாக மாற்றுகிறது. திடீரென நிகழும் தாக்குதல்களில் சிலர் உயிரிழக்க, மீதமுள்ளவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடிக்கிறார்கள். இறுதியில் அந்த அனகோண்டா தாக்குதலிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாக் பிளாக் தனது இயல்பான நகைச்சுவை நடிப்பின் மூலம் கதைக்கு லேசான சிரிப்பை சேர்த்துள்ளார். சில இடங்களில் அவரது உடல் மொழியும், டைமிங் காமெடியும் ரசிக்க வைக்கிறது. பால் ரட் நடித்துள்ள கதாபாத்திரம் குழுவின் மன அழுத்தத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

    அனகோண்டா பாம்பின் காட்சிகள் CGI மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும், முழுமையான திரில்லைக் கொடுக்க தவறுகிறது. பாம்பின் பிரம்மாண்டம் கண்களை கவர்ந்தாலும், அதன் தாக்கம் பார்வையாளரை முழுமையாக பதற்றத்தில் ஆழ்த்தவில்லை.

    இயக்கம்

    இயற்கையின் ஆபத்தையும், மனிதர்களின் பேராசையையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் டாம் கோர்மிகன். திரைக்கதையில் இன்னும் கூடுதல் அழுத்தமும், விறுவிறுப்பும் இருந்திருந்தால் படம் மேலும் பலமாக அமைந்திருக்கும்.

    ஒளிப்பதிவு

    நைஜல் பிளக் ஒளிப்பதிவு அமேசான் காடுகளின் அழகையும், அதன் அபாயகரமான சூழலையும் நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.

    இசை

    டேவிட் பிளெமிங் பின்னணி இசை சில காட்சிகளில் பதற்றத்தை கூட்டுகிறது. பல இடங்களில் இசை மற்றும் காட்சி இணைப்பு சராசரியாகவே உள்ளது.

    • 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
    • கடந்த மாதம் 14-ந்தேதி வெளியான ‘கும்கி 2’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    'கும்கி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டு இருந்தது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ந்தேதி வெளியான 'கும்கி 2' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், 'கும்கி 2' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கும்கி 2' படம் ஜனவரி 3-ந்தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. 



    • AK-வுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    • இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    நடிகர் அஜித்குமாரின் ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் பந்தயத்தில் அவர் செய்த சாதனைகளை குறித்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்து வருகிறார்.

    இந்த நிலையில், மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் மற்றும் அவரது குழு, மிச்சலின் 12 H கார் பந்தயத்தில் பங்கேற்றது தொடர்பான ஆவணப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. AK-வுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 



    • அவரது நடிப்பில் ‘காக்டெயில்', ‘மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
    • பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

    'புஷ்பா' படத்தில் நடித்து பான் இந்திய நடிகையாக பிரபலமான ராஷ்மிகாவுக்கு அதன்பிறகு அடித்தது அனைத்துமே 'ஜாக்பாட்' தான்.

    தமிழில் விஜய் ஜோடியாக நடித்த 'வாரிசு' ரூ.300 கோடியும், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்த 'அனிமல்' படம் ரூ.1,000 கோடியும், அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த 'புஷ்பா-2' ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

    அவரது நடிப்பில் 'காக்டெயில்', 'மைசா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

    இது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ள ராஷ்மிகா, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைக்கிறார்.

    • ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளது என வழக்கு நடந்து வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வேர்ல்ட் ஆப் பராசக்தி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    11 நிமிடங்கள் விரிவாக ஓடும் இந்த இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே தலைப்பில் படக்குழு வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி ஒன்றையும் நடத்தியிருந்தது. 

    இதற்கிடையே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    • கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
    • தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    தமிழில் தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'கௌரி' சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக மாநிலம் கோட்டூரு பகுதியைச் சேர்ந்த நந்தினி, கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். பல தொடர்களில் துணை நடிகையாக தடம் பதித்த நந்தினி, கௌரி தொடரில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

    'கௌரி' சீரியல் படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பெங்களூருவில் தான் வசித்து வந்த வீட்டில் நந்தினி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் நந்தினி எழுதி வைத்த கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அதில், திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாரக இல்லை என்றும் இதனால் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நந்தினி எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நந்தியின் தற்கொலை சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   

    • ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.
    • 2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

    பிரபல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2019-இல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தப் புதிய படத்துக்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி 2026 முதல் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    • 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
    • 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

    பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

    இந்நிலையில், படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் ரூ. 1100.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 862.23 கோடியும், மற்றநாடுகளில் 238 கோடியும் குறிவித்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.



    • ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.
    • ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. உலகமெங்கும் இருந்து விஜயின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஆர். எண்டர்டெயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4:00 மணிக்கு நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆரம்பத்தில், அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி தயாரிப்பாளரிடமிருந்து வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக, அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே, கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்படும். அனைத்து கேரள தளபதி ரசிகர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 



    ×