search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள் மீனா: மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது...
    X

    மலரும் நினைவுகள் மீனா: மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது...

    • சிரஞ்சீவியோடு நான் நடித்த முதல் படம் அது.
    • ஒரு நாள் ஒரு காட்சி. அந்த காட்சியில் தலையில் மண்பானையில் தண்ணீரை நான் சுமந்து செல்ல வேண்டும்.

    ரெடி...

    ஸ்டார்ட்...

    ஆக்ஷன்... என்று சொன்னதும் கேமராவை ஒளிப்பதிவாளர் சுழல விடுவார். நாம் நடிக்க வேண்டும். அவ்வளவு தான். ஆனால் ஆக்ஷன் என்றதும் ஒளிப்பதிவாளர் கல்லெடுத்து என் தலையை நோக்கி எறிந்து மண்டையை உடைத்தால் எப்படி இருந்திருக்கும்?

    அப்படியும் ஒரு சம்பவத்தையும் சந்தித்தேன். முட்டா மேஸ்திரி என்ற தெலுங்கு படம். நானும், நடிகர் சிரஞ்சீவியும் ஜோடி. இந்த படத்தில் ரோஜாவும் உண்டு. லாரன்ஸ் மாஸ்டர் குரூப் டான்சராக இருந்தார்.

    சிரஞ்சீவியோடு நான் நடித்த முதல் படம் அது. படம் முழுக்க கலகலப்பாக, ஜாலியாக இருக்கும். என் பெயர் பஜ்ஜிக்கடை புஜ்ஜம்மா. அதற்கு ஏற்றாற்போல சுறு சுறுப்பாகவும், மிடுக்கென்றும் பேசும் பாத்திரம் எனக்கு. இதற்கு நேர் மாறானது ஹீரோ சிரஞ்சீவியின் பாத்திரம். அவர் சாதாரண கூலிக்காரராக வருவார். மிகவும் அமைதியாக இருப்பார். அப்படி பட்டவர் எப்படி அரசியல்வாதியாக மாறி முதல்-மந்திரி பதவி வரை செல்கிறார் என்பதை விவரிக்கும் படம்.

    ஷூட்டிங் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஒரு நாள் ஒரு காட்சி. அந்த காட்சியில் தலையில் மண்பானையில் தண்ணீரை நான் சுமந்து செல்ல வேண்டும். நான் போகும் வழியில் மிகப்பெரிய கலவரம் நடக்கும். எல்லோரும் அங்கும், இங்கும் ஓடுவார்கள். ஊரே அல்லோலப்படும். கல் எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். கற்கள் ஆங்காங்கே பறக்கும். அப்போது என் தலையில் இருக்கும் பானையில் ஒரு கல் வந்து விழ வேண்டும். அதில் பானை உடைந்து தண்ணீர் கொட்ட வேண்டும். இது தான் காட்சி.

    டைரக்டர் கோதண்ட ராமரெட்டி சார். காட்சியை தெளிவாக விளக்கி சொன்னார். பானையின் மீது கல் வந்து விழுந்ததும் நீங்கள் பானையை விட்டு விடுங்கள். அது கீழே விழுந்து உடையட்டும். ஏனென்றால் தலை மீது இருந்தே உடைந்தால் தண்ணீர் உடலில் சிந்தும் என்று கூறி இருந்தார்.

    காட்சியை விளக்கியதும் திட்டமிட்டப்படி பானையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அதை என் தலையில் தூக்கி வைத்தாகி விட்டது. எதிரே நின்று கல்லை எடுத்து எறிவது யார் என்ற கேள்வி வந்தது. அப்போது ஒருவரும் அதற்கு தயாரில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பயம். எறியும் கல் குறி தவறி மீனா மேடம் தலையில் விழுந்தால்.... அய்யய்யோ நான் எறிய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் ஜகா வாங்கினார்கள்.

    அதை பார்த்ததும் ஒளிப்பதிவாளர் வேறு வழியில்லாமல் விடுங்கப்பா நானே எறிகிறேன் என்று சொல்லிவிட்டு உதவியாளர் கையில் கேமராவை கொடுத்து விட்டு எறிவதற்கு தயாரானார்.


    கூர்மையான கருங்கல் ஜல்லியை கையில் வைத்துக் கொண்டு என் தலை மீது இருந்த பானையை குறி பார்த்தபடி ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் என்றதும் கல்லை வீசினார். அந்த கல் எல்லோரும் எதிர் பார்த்தபடியே குறி தவறி பானையில் விழுவதற்கு பதில் என் தலையை பதம் பார்த்தது. நடிப்பதில் முழு கவனமாக இருந்த நான் என்ன தலை வலிக்கிறது என்று எதுவும் புரியாமல் டக்கென்று பானையை கீழே விட்டு விட்டேன். தலையில் கையை வைத்தால் ரத்தம் கொட்டுகிறது. தலையில் இருந்து கை வழியாக ரத்தம் வழிந்தது. அதை பார்த்ததும் மொத்த படக்குழுவும் அய்யயோ.. அய்யயோ என்று பதறிவிட்டது. உடனே அங்கிருந்து அருகில் உள்ள ஒரு சிறிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள்.

    காயத்தை பார்த்த டாக்டர் ரத்தத்தை துடைத்து விட்டு காயம் ரொம்ப ஆழமாக இருக்கிறது. தையல் போட வேண்டியது அவசியம் என்றார்.

    அதையடுத்து 5 தையல்கள் போடப்பட்டது. அடிபட்ட நேரமோ உணவு இடைவேளை விட வேண்டிய நேரம். இந்த ஒரு ஷாட்டையும் முடித்து விட்டு உணவு இடைவேளை விடலாம் என்று டைரக்டர் நினைத்து இருந்த நேரத்தில் தான் இப்படி ஆகி விட்டது. தலையில் தையல் போட்டு பிளாஸ்டரும் ஒட்டப்பட்டது.

    எனக்கோ தலையில் பட்ட காயத்தின் வலி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மதிய உணவு இடைவேளை என்பதால் பசி வேறு. இந்த பிளாஸ்டர் போடப்பட்டு இருப்பதால் எப்படி தொடர்ந்து நடிப்பது என்று மனதில் சங்கடம். அன்றைய காட்சியை நடித்து கொடுத்து விட்டு வேறு படப் பிடிப்புக்கும் செல்ல வேண்டி இருக்கிறதே என்று என்ன செய்வது என்று நினைத்த போது ரொம்ப கவலையாக இருந்தது.

    ஏனெனில் அந்த காலக் கட்டத்தில் அவ்வளவு பிசியாக இருந்தேன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. 4 நாட்கள் ஒரு ஊரில் இருப்பேன். அங்கு இரவில் தான் படப்பிடிப்பு முடியும். உடனே புறப்பட்டு மறுநாள் காலையில் வேறு ஒரு படப்பிடிப்பிற்காக வேறு ஒரு ஊருக்கு செல்வேன். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவதை போல் ஓடிக்கொண்டு இருப்பேன். ஆஸ்பத்திரியில் தையல் போட்டு முடித்ததும் நேராக ஷூட்டிங் நடந்த இடத்திற்கு தான் சென்றேன். என் நிலைமையை பார்த்ததும் மேடம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள் என்றார் டைரக்டர்.

    ஆனால் நான் ரெஸ்ட் எடுப்பதை விரும்பவில்லை. எப்படியாவது அந்த காட்சியை நடித்து கொடுத்து விட்டு பொள்ளாச்சி அருகே நடைபெற்ற எஜமான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். இரு படங்களுடைய படப்பிடிப்பையும் ரத்து செய்ய முடியாது.

    தலையில் கட்டுடன் எஜமானை தேடி எப்படி சென்றேன்? அங்கு நடந்தது என்ன? என்பது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×