search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செயற்கைக்கோள் மூலம் இண்டர்நெட் வழங்கும் ஃபேஸ்புக்

    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    Next Story
    ×