search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    முகேஷ் அம்பானி
    X
    முகேஷ் அம்பானி

    அதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் - ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் அதுபோன்ற குறுந்தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்து வருகிறது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு போலி குறுந்தகவல்கள் பற்றி எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு 25 ஜி.பி. இலவச டேட்டா வழங்குவதாக எஸ்.எம்.எஸ். ஒன்று பரவி வருகிறது. இதுபோன்ற குறுந்தகவல்களை ஜியோ ஒருபோதும் அனுப்புவதில்லை என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

    ஜியோ வழங்கும் சலுகைகள் அனைத்தும் மைஜியோ செயலி அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். குறுந்தகவல் மூலம் வரும் சலுகை மற்றும் அறிவிப்புகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் என ரிலையன்ஸ்  ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்தது. ரூ. 699 எனும் துவக்க விலையில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி. வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் டேட்டா, டி.வி. வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    துவக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை அறிவித்த ஜியோ பெயரில் சமீப காலங்களில் அதிக போலி தகவல்கள் பரப்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் ஜியோ புதிய சலுகையை அறிவித்துள்ளது என்றும் இலவச சேவைகளை வழங்குவதாகவும் கூறி இணைய முகவரியை க்ளிக் செய்யக் கோரும் தகவல் இடம்பெற்றிருக்கும்.

    வாடிக்கையாளர்கள் இணைய முகவரியை க்ளிக் செய்தால் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும். இவை பயனர் விவரங்களை சேகரித்து மற்ற சர்வர்களுக்கு அனுப்புவதில் துவங்கி, மால்வேர் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இதனால் பயனர்கள் குறுந்தகவல்களில் வரும் சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜியோ தெரிவித்து வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற குறுந்தகவல்களை கவனமாக கையாண்டால் அவற்றில் துளியும் உண்மையில்லை என தெரியவரும்.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×