என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

சர்ச்சை ஏற்படுத்திய அம்சத்தை அதிரடியாக நீக்கிய ரியல்மி
- பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக ரியல்மி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
- அம்சம் நீக்கப்பட்டதோடு அதற்கான விவர குறிப்பும் மாற்றப்பட்டு உள்ளது.
ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுமதி இன்றி செயல்படுத்தப்பட்டு இருந்த என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் புதிய அப்டேட் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் குறித்து டுவிட்டரில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், சர்ச்சை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரியல்மி தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தன்தரப்பு விளக்கங்களை கொடுத்தது. இந்த நிலையில் தான் ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு (RMX3771_13.1.0.524(EX01) மற்றும் RMX3741_13.1.0.524(EX01)) அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் தானாக செயல்படுத்தப்பட்ட என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் அம்சத்தை நீக்குகிறது.
அம்சத்தை நீக்கியதோடு, இதற்கான விவர குறிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விவர குறிப்பில் ரியல்மி நிறுவனம்- ஆப் பயன்பாட்டு விவரங்கள், கலென்டர் நிகழ்வுகள், படிக்கப்படாத குறுந்தகவல் மற்றும் தவறிய அழைப்புகள் சார்ந்த தகவல்களை சேகரிப்பதாக கூறும் தகவலை நீக்கி இருக்கிறது.
பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரியல்மி நிறுவனம் இவ்வாறு செய்யவில்லை என்றும், பயனர் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்து இருந்தது.






