search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு தீங்கானது.. சொல்வது யார் தெரியுமா?
    X

    ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு தீங்கானது.. சொல்வது யார் தெரியுமா?

    • சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.
    • ஸ்மார்ட்போன் கேமிங், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைக்கின்றன.

    ஸ்மார்ட்போன்கள் இன்று நம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டன என்று கூறலாம். ஸ்மார்ட்போன்களால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று கூறினாலும், இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற கேள்வி அனைவரின் ஆழ்மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். சமீப காலங்களில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.

    90-ஸ் கிட்ஸ் போன்றில்லாமல், இந்த காலத்து குழுந்தைகள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தவே ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் கேமிங் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வெளியுலக ஆர்வத்தை குறைத்துவிடுகின்றன. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது, பெற்றோருக்கு மிகவும் கவலை தரும் செயலாகவே இருக்கிறது.


    இந்த நிலையில், சியோமி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மனு குமார் ஜெயின் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிவிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. லின்க்டு-இன் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவு, குழந்தைகளின் நன்மைக்காக பெற்றோர் செய்ய வேண்டிய மறுபரிசீலனைகளை கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் சியோமி. இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தான் மனு குமார் ஜெயின். இவரே ஸ்மார்ட்போனுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது லின்க்டு-இன் பதிவு, "குழந்தைகளிடம் உங்களின் ஸ்மார்ட்போன்களை கொடுப்பதை நிறுத்துங்கள்" எனும் தலைப்பு கொண்டுள்ளது.

    சேபியன் லேப்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நண்பர் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார். அதில், "குழந்தைகளிடம் இளம் வயதிலேயே ஸ்மார்ட்போன் ( மற்றும் டேப்லட்களை) கொடுப்பதால், அவர்களது இளமை காலம் பாதிக்கப்படுவதோடு, பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு மனநிலை சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் வெளியாகி இருக்கும் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன."

    "பத்து வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்த துவங்கிய பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேர், பெரியவர்கள் ஆனதும் மனநிலை சார்ந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ஆண்களில் இதுபோன்ற பாதிப்பு 45 முதல் 50 சதவீதம் பேருக்கு ஏற்பட்டுள்ளது," என்று மனு குமார் ஜெயின் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக பெற்றோர் தங்களது குழுந்தைகள் அழும் போது, உணவு சாப்பிடும் போது அல்லது பயணத்தின் போது ஸ்மார்ட்போன்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக பெற்றோர் குழந்தைகளை வெளியுலக செயல்களில் ஈடுபட வைக்கலாம். இது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்கச் செய்வதோடு, கல்வி மற்றும் சமூக உரையாடல்களில் அவர்களை அதிகளவில் ஈடுபட வைக்கும்.

    மனு குமார் ஜெயின் பதிவு, குழுந்தைகளை மனநல பாதிப்பில் சிக்காமல் பாதுகாக்க வேண்டிய பெற்றோரின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவரது பதிவு எடுத்துரைக்கிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    தான் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட் போன்ற சாதனங்களுக்கு எதிரானவன் இல்லை என்றும், இவை நம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றை தானும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருவதாக மனு குமார் ஜெயின் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவற்றை குழந்தைகள் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது எச்சரிக்கை அவசியம் என்று மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×