என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    தொழில்நுட்ப சந்தையின் மற்ற முன்னணி நிறுவனங்களை போன்றே எல்ஜி நிறுவனமும் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
    சியோல்:

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை போன்றே எல்ஜி நிறுவனமும் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது. முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதே போன்ற காப்புரிமையை பெற்றது குறிப்பிடத்தது. 

    அமெரிக்காவின் காப்புரிமைகள் வழங்கும் இணையதளத்தில் எல்ஜி நிறுவனத்தின் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காப்புரிமையில் பல்வேறு தகவல்கள் தெரியவில்லை என்றாலும் இந்த டிஸ்ப்ளேவினை இரண்டாக மடிக்கும் திறன் கொண்டுள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது. 

    தற்சமயம் வரை எல்ஜி நிறுவனத்தின் மடிக்கும் ஸ்மார்ட்போனின் விநியோக தேதி குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக எல்ஜி Flex மற்றும் எல்ஜி Flex 2 ஸ்மார்ட்போன்களில் வளைந்த டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது.    

    அமெரிக்க காப்புரிமை தளத்தின் மூலம் தெரியவந்துள்ள புதிய தகவல்கள் எல்ஜி நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதை மட்டும் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே சாம்சங் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களும் இதே போன்ற காப்புரிமைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S7 எட்ஜ் மற்றும் கேலக்ஸி ரவுண்டு உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் வளைந்த டிஸ்ப்ளேக்களை வழங்கியிருந்தது. தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டிலேயே வெளியிட இருப்பதாக கூறப்பட்டது.    

    இதை நிரூபிக்கும் விதமாக சாம்சங் கேலக்ஸி X என்ற ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த ஸ்மார்ட்போனினை மூன்று விதமாக மடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    பையில் மடித்து வைக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் காப்புரிமைகளை சமீபத்தில் பெற்றுள்ளது.
    நியூ யார்க்:

    மைக்ரோசாப்ட் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையில் அந்நிறுவனம் வளையும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பது தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காப்புரிமையின் கீழ் உருவாக இருக்கும் புதிய சாதனம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என இரண்டு சாதனங்களின் பயன்பாடுகளை ஒற்றை சாதனத்திலேயே வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    புதிய வளையும் சாதனமானது லெனோவோவின் யோகா டேப்லெட் சாதனத்தில் வழங்கப்படுவதை போன்ற டென்ட் மோட் வழங்கப்பட இருக்கிறது. சாதனத்தை வெவ்வேறு திரை அளவுகளில் பயன்படுத்த இரண்டிற்கும் மேற்பட்ட மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. இது பார்க்க மைக்ரோசாப்ட் கொரியர் கான்செப்ட் போன்றே காட்சியளிக்கும் என செய்தி வெளியாகியுள்ளது. 

    இந்த சாதனம் தவிர மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ டேப்லெட் சாதனத்தை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 என அழைக்கப்படும் இந்த சாதனம் 2 இன் 1 அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே, காந்த சக்தி கொண்ட ஸ்டைலஸ், பென்டக்ரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 உடன் சர்ஃபேஸ் பென் ஒன்றும் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் காந்தம் கொண்ட சார்ஜிங் அமைப்பு வழங்கப்படவுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் கவனம் செலுத்தும் என்பதை அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
    பணம் வைக்கும் பர்ஸ் போன்று இரண்டாக மடித்து பாக்கெட்டில் வைக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபில் டிஸ்ப்ளேக்கள் புகைப்படங்களாக அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 100,000 மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. 

    தொழில்நுட்ப ரீதியாக பணிகள் நிறைவுற்ற போதிலும் இந்த ஸ்மார்ட்போனினை வெளியிடுவது குறித்த இறுதி முடிவுகளை சாம்சங் இன்னும் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சாம்சங் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மடிக்கும் ஸ்மார்ட்போன்களை சாதாரணமாக இருக்கும் போது 7 இன்ச் டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனம் போன்றே எல்ஜி நிறுவனமும் 100,000 மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு நான்காம் காலாண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளை எல்ஜி நிறுவனம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டதாகவும் இது சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேவை விட அதிநவீன வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.  

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்பட்டது. இவை இந்த ஆண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு வெளியான தகவல்களில் வளையும் தன்மையுடன் OLED டூயல்-ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் தயாரித்து வருவதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
    கையில் வளையில் போல் மாட்டி கொள்ளும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
    சான்பிரான்சிஸ்கோ:

    இனி யாரும் ஸ்மார்ட்போன்களை கைகளிலும், பாக்கெட்களிலும் தூக்கி செல்ல வேண்டாம், வளையல் போல் மாட்டி கொள்ளலாம் என அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் படி இந்நிறுவனம் தயாரித்துள்ள ப்ரோட்டோடைப் ஸ்மார்ட்போனினை கையில் வளையல் போல் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கையில் அணிந்திருக்கும் போது வரும் அழைப்புகளை ஸ்பீக்கர் மூலம் அப்படியே ஏற்கவும் முடியும், கையில் இருந்து கழற்றி எடுத்து வழக்கமான ஸ்மார்ட்போன் போன்று மாற்றி காதில் வைத்தும் பேச முடியும். பின் பேசி முடித்ததும் மீண்டும் கையில் மாட்டி கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    ஃப்ளெக்ஸ் போன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனினை ராயல் கார்ப்பரேஷன் எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த சாதனத்தை ஃபிட்னஸ் டிராக்கர் போன்றும் பயன்படுத்தலாம். இதில் இதயத் துடிப்பை டிராக் செய்யும் சென்சார் உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    6 மில்லி மீட்டர் தடிமன் மற்றும் 100 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் உடற்பயிற்சி செய்யும் போதும் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது. கூடுதலாக இதன் டிஸ்ப்ளே முழுமையாக வளையும் தன்மை கொண்டுள்ளதால் போன் கீழே விழும் என்ற அச்சமும் இந்த ஸ்மார்ட்போனில் எழாது. இத்துடன் இதன் வளையும் தன்மையானது கீழே விழுந்தாலும் அதிக சேதாரம் ஆகாதபடி பர்த்து கொள்ளும்.  
         
    3ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷன் கொண்டுள்ள ப்ளெக்ஸ் ஸ்மார்ட்போன் சிம் கார்டு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. வளையும் தன்மை கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு சமீபத்தில் நடந்து முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 
    சாம்சங் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் உதவியாளர் மென்பொருள் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மென்பொருள் சேவையின் பெயர் 'பிக்ஸ்பி' (Bixby) என்பது தெரியவந்துள்ளது. இத்தகவல் சாம்சங் பே சேவை சார்ந்த அதிகாரப்பூர்வமான தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சாம்சங் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அந்நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  

    விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை சார்ந்து வெளியாகியுள்ள புகைப்படத்தில் சாம்சங் பே மினி (mini) என்ற சேவை உருவாகி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆப்ஷன் சாம்சங் பே சேவையின் புதிய பதிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

    சாம்சங் நிறுவனத்தின் மொபைல் தகவல் பரிமாற்ற பிரிவின் துணை தலைவர் லீ கீயோங்-தே அடுத்து வெளியாக இருக்கும் உயர் ரக கேலக்ஸி ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்படும் என கடந்த ஆண்டே தெரிவித்தார். சாம்சங் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆண் மற்றும் பெண் குரல்களை கொண்டிருக்கும் என முன்னதாக வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

    புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் செயலிகள் சாம்சங் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவ் லேப்ஸ் எனும் அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றி செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவை சாம்சங் நிறுவனம் துவங்கியது. இதே நிறுவனம் தான் ஆப்பிளின் சிரி செயற்கை நுண்ணறிவு மென்பொருளையும் கண்டறிந்தது.  

    சாம்சங் பே மினி சேவை என்பது ஆன்லைன் கட்டண முறையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் கேலகக்ஸி S8 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் புதிய தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:  

    சாம்சங் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்லினில் நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் ஃபிரான்டியர் மற்றும் கிளாசிக் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. 

    இந்தியாவில் இரண்டு கியர் S3 ஸ்மார்ட்வாட்ச்களும் ரூ.28,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜனவரி 18 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் நாடு முழுக்க இயங்கி வரும் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களில் இவை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சாம்சங் கியர் S3 சிறப்பம்சங்களை பொருத்த வரை 1.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் வளையும் பெஸல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் ஃபுல்-கலர் 'ஆல்வேஸ் ஆன்' டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 
     
    இத்துடன் டூயல்-கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 768 எம்பி ரேம், மற்றும் கியர் S2 ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்ட 4GB அளவு இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 சான்று பெற்றுள்ளது. இதனால் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் இதய துடிப்பை டிராக் செய்யும் சென்சார் மற்றும் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 380 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனம் தனது கியர் ஸ்மார்ட்வாட்ச்கள் ஐஓஎஸ் இயங்குதளத்துடன் இயங்கும் செயலிகளை அறிமுகம் செய்தது. அதன் படி கியர் S2, கியர் S3 மற்றும் கியர் ஃபிட் 2 உள்ளிட்ட சாதனங்களுக்கு ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்துடன் இணைந்து இயங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    போகிற வேகத்தில் ஓட்டுபவர்களை குப்புற தள்ளிவிடாமல், தேவைப்பட்டால் உரிமையாளரின் பின்னால் நாய்குட்டி போல் தானாகவே பின்தொடர்ந்து வரும் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை ‘ஹோண்டா’ நிறுவனம் தயாரித்து வருகிறது.
    நியூயார்க்:

    சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அசத்தலான வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வதை விரும்பாத இளைஞர்கள் இந்த உலகின் எந்த மூலையிலும் இருக்க முடியாது.

    ஆனால், இருசக்கர வாகனங்களை பொருத்தமட்டில், வேகத்துக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ராட்சதத்தனமாக சீறிப்பாய்ந்து செல்லும் அதிநவீன பைக்குகள் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது.

    குறிப்பாக, மிதமிஞ்சிய வேகத்தில் சென்று பிரேக் அடிக்கும்போது வழுக்கிக்கொண்டு சாலையில் சரிந்துப் பாய்வதும், குறுகிய வளைவுகளில் திரும்பும்போதும், பள்ளங்களில் விழுந்து எழும்போதும் சில வாகனங்கள் பக்கவாட்டில் சாய்ந்து, விழுந்து ஓட்டுனரை காயப்படுத்தி விடுவதுண்டு.

    இதனால், இறக்குமதி செய்யப்பட்ட ‘இம்போர்ட்டட் பைக்’ என்றால் சிலர் தடவிப் பார்ப்பதோடும், எட்டநின்றே வேடிக்கை பார்ப்பதோடும் தங்களது ஆவலை அடக்கிக் கொள்வதுண்டு.

    இனி, இதைப்போன்றவர்களும் ஓட்டி மகிழ்வதற்கென்றே ஜப்பானை சேர்ந்த ‘ஹோண்டா’ நிறுவனம் அதிநவீன ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்து வருகிறது.

    தயாரிப்பு நிறைவடைந்து, இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் ’ரைடிங் அசிஸ்ட்’ என்ற அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் இல்லாமல் இரு சக்கரங்களில் தரையில் செங்குத்தாக நிற்கவும், சற்றும் சரிந்து, சாயாமல் தானாகவே மெதுவாக புறப்பட்டு ஓடவும் செய்கிறது.

    பள்ளம் மேடுகளுக்கேற்ப தனது உடலை நீட்டி, குறுக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளதால் வாகனத்தில் இருந்து தூக்கியெறியப்படும் அபாயமும் மிகக்குறைவு இந்த பைக்கின் சிறப்பம்சமாகும்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற புதியரக வாகன வடிவமைப்பு கண்காட்சியில் இடம்பெற்ற இந்த பைக், உரிமையாளர் முன்னால் நடந்து செல்லும்போது, தலையை இடது, வலதுபுறமாக திருப்பியவாறு, நாய்குட்டி போல அவரை பின்தொடர்ந்து செல்லும் காட்சியை கண்ட பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.

    வாகனம் நிறுத்துமிட வசதியை தேடி நடந்துச் செல்லும் உரிமையாளர், காலியாக உள்ள இடத்தை தேர்வு செய்த பின்னர், திரும்பிவந்து பைக்கை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. அவரை பின்தொடர்ந்து வரும் இந்த புதியரக பைக், தான் ஓய்வெடுக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக நின்று இளைப்பாறலாம்.

    விற்பனை ரீதியாக இந்த மோட்டார் சைக்கிள் எப்போது வெளியாகும்? என்ற ஆவலை இப்போதே கிளப்பி விட்டுள்ள ’ரைடிங் அசிஸ்ட்’டின் செயல்திறனைக்காண..,

    லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சிஇஎஸ்) இந்திய நிறுவனத்தின் ஃபிட்னஸ் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    சான்பிரான்சிஸ்கோ:

    இந்திய ஃபிட்னஸ் தொழில்நுட்ப நிறுவனமான போல்ட் (Boltt) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும், அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    போல்ட் அறிமுகம் செய்துள்ள சாதனங்களில் இணைக்கப்பட்ட காலணிகள், ஸ்டிரைட் சென்சார், ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் விர்ச்சுவல் ஹெல்த் அசிஸ்டன்ட் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போல்ட் நிறுவனத்தின் விர்ச்சுவல் ஹெல்த் அசிஸ்டண்ட் பி (B) என பெயரிடப்பட்டுள்ளது.     

    சாதாரண உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை மாற்றி, அதனை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் மாற்ற இருக்கிறோம் என போல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்னாவ் கிஷோர் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். 

    போல்ட் நிறுவனத்தின் இணைக்கப்பட்ட காலணிகள் பல்வேறு பயன்பாடுகளை எளிமையாக்கும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஸ்டிரைட் சென்சாரினை அனைத்து காலணிகள் மற்றும் உடலில் அணியக்கூடிய மற்ற பேண்டுகளில் அணிந்து கொள்ளலாம். இந்த சென்சார்கள் உடலின் நடவடிக்கைகளை டிராக் செய்து உங்களுக்கு தகவல்களை வழங்கும்.  

    சென்சார்கள் டிராக் செய்து அனுப்பும் தகவல்களை போல்ட் மொபைல் செயலி மூலம் பார்க்க முடியும். இந்த செயலி விர்ச்சுவல் அசிஸ்டண்ட் பி-உடன் இணைந்து பயனர்களுடன் உரையாடி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி சார்ந்த தகவல்களை தெரிவிக்கும், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பானாசோனிக் நிறுவனம் புதிய வகை அம்சங்கள் நிறைந்த கேமரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    பானாசோனிக் நிறுவனம் லுமிக்ஸ் (Lumix) GH5 கேமராவினை கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டோகினியாவில் அறிமுகம் செய்தது. இது உலகின் முதல் 'இன்டர்சேஞ்சபில் லென்ஸ் மிரர்லெஸ் கேமரா' (interchangeable lens mirrorless camera) ஆகும். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் இது குறித்து அதிகப்படியான தகவல்கள் வழங்கப்படவில்லை. 

    தற்போது நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பானாசோனிக் லுமிக்ஸ் GH5 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளது. 

    புதிய பானாசோனிக் லுமிக்ஸ் GH5 கேமராவில் 20.3 மெகா பிக்ஸல் டிஜிட்டல் லைவ் MOS மைக்ரோ சென்சார்கள் வீனஸ் என்ஜின் இமேஜிங் பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த கேமராவை பயன்படுத்தி 60fps வேகத்தில் 4K வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 16K புகைப்படங்களை எடுக்க முடியும். 

    வீனஸ் என்ஜினில் வழங்கப்பட்டுள்ள புதிய வகை தொழில்நுட்பம் மூலம் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் என்றும் நிறங்களை அதிக சிறப்பாக பிரதிபலிக்கும். 

    லுமிக்ஸ் GH5 கேமராவில் 5-axis Dual IS, மற்றும் 2-axis OIS வழங்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு செய்யும் திறன்களை பொருத்த வரை MOV, MP4, AVCHD Progressive மற்றும் AVCHD உள்ளிட்ட ஃபார்மேட்களை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் FHD மற்றும் 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இதில் மேம்படுத்தப்பட்டுள்ள 4K போட்டோ மோட் 60fps எனும் அதிவேகத்தில் 8 மெகாபிக்சல் தரத்திற்கு நிகரான தரத்தில் புகைப்படங்களை எடுக்க முடியும். 

    மக்னீசியம் அல்லாய் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள லுமிக்ஸ் GH5 பாதுகாப்பான வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் இந்த கேமரா தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த கேமராவின் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை UHS-II சப்போர்ட் கொண்ட இரட்டை எஸ்டி கார்டு ஸ்லாட், 3.2 இன்ச் ஃப்ரீ ஆங்கில் ஸ்கிரீன் ப்ளூடூத் 4.2, வைபை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் இந்த கேமராவின் விலை 1,999.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,35,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    தொழில்நுட்ப சந்தையில் புதுவரவு சாதனமாக மிஸ்ஃபிட் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் முதல் தொடுதிரை கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஃபாஸில் நிறுவனத்தின் மிஸ்ஃபிட், தொடுதிரை வசதி கொண்ட தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் முன்னதாக ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வெளியிட்டு வந்த நிலையில் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் கால் பதித்துள்ளது.  

    அந்த வகையில் மிஸ்ஃபிட் வெளியிட்டுள்ள ஸ்மர்ட்வாட்ச் வேபர் (Vapor) என அழைக்கப்படுகிறது. தொழில்நுட்ப சந்தையின் பெரிய நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச்களின் விற்பனை குறைவு காரணமாக அவற்றை ஒதுக்கி வரும் நிலையில், மிஸ்ஃபிட் தனது ஸ்மார்ட்வாட்ச்களை களமிறக்கியுள்ளது. சாதாரண ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பை கொண்டுள்ள மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ மெட்டாலிக் ஓரங்களை கொண்டுள்ளது.  

    அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் மிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றே தெரிகிறது. வேபர் ஸ்மார்ட்வாட்ச் 1.4 இன்ச் AMOLED தொடுதிரை வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர் மற்றும் 4GB இன்டர்னல் மெமரி கொண்டுள்ளது. இதன் யூஸர் இன்டர்ஃபேஸ் வித்தியாசமான அம்சம் கொண்டு இருப்பதாக மிஸ்ஃபிட் தெரிவித்துள்ளது. 

    புதிய அம்சம் டச் பெஸல் என அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு டச்வீல் மூலம் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஸ்ஃபிட் வேபர் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்வதோடு, வைபை மூலம் இணைந்து கொண்டும் இயங்கும். இதில் ப்ளூடூத் மற்றும் GPS உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.     

    மிஸ்ஃபிட் வேபர் ஸ்மார்வாட்ச் பல்வேறு சென்சார்கள் மற்றும் வாட்டர்ப்ரூஃப், மாற்றக் கூடிய ஸ்டிராப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் போது ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கும். இதன் விலை 200 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 7-ல் ஹெட்போன் ஜாக் மற்றும் கூடுதலாக 3000 எம்ஏஎச் பேட்டரி பெறுவது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஏர்பாட்ஸ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை வெளியிட்டது. 

    இந்நிலையில் ஐபோன் 7 ஸ்மார்ட்போனிற்கு ஹெட்போன் ஜாக் மற்றும் கூடுதலாக 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை வழங்கும் புதிய சாதனம் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் உபகரணங்களை (Accessories) தயாரித்து விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான கிரிஃபின் ஐபோன் 7 கேஸ் வகையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த கேஸ் மூலம் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டுள்ளது. 

    ஐபோன் 7-ல் 1960 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய கேஸ் மூலம் 1.5 மடங்கு கூடுதல் பேட்டரி பெற முடியும். இதோடு ஐபோன்  7-ல் முழு சார்ஜ் தீர்ந்து போனாலும், கிரிஃபின் கேஸ் கொண்டு முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

    கிரிஃபின் ரிசர்வ் ஐபோன் 7 கேஸ் ஆப்பிளின் MFi சான்று பெற்றிருப்பதால் அதிகாரப்பூர்வமாக ஐபோனுடன் இவற்றை பயன்படுத்த முடியும். இதன் விலை 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படும் என்றும் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    லீஇகோ நிறுவனம் புதிய ஸ்மார்ட் மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் மிதிவண்டி குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
    சான்பிரான்சிஸ்கோ: 

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா நடைபெற்று வருகிறது. இதில் லீஇகோ நிறுவனம் அமெரிக்க சந்தைக்கென 18.5 பவுண்டு எடை கொண்ட புதிய வகை ஸ்மார்ட் மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது. 

    ஆண்ட்ராய்டு சார்ந்த பைக் ஓஎஸ் (BikeOS) கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் சைக்கிள் தொடுதிரை டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனால் இந்த மிதிவண்டியை ஓட்டுபவர் வழியை திரையில் பார்க்கலாம் என்பதோடு உடலில் ஏற்படும் மாற்றங்களை டிராக் செய்ய முடியும். லீஇகோ ஸ்மார்ட் ரோட் பைக் என அழைக்கப்படும் இந்த மிதிவண்டி ஏரோடைனமிக் டோரே T700 கார்பன் ஃபைபர் ஃபிரேம், ஃபோர்க், சீட் போஸ்ட், கைப்பிடி மற்றும் சக்கரங்களை கொண்டுள்ளது.  



    லீஇகோ ஸ்மார்ட் மிதிவண்டிகள் ஆண்ட்ராய்டு 6.0 சார்ந்த பைக் ஓஎஸ் மற்றும் 4.0 இன்ச் தொடுதிரை, குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 6000 எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள தொடுதிரையில் வழி தெரியாத இடங்களில் மேப்களின் உதவியுடன் எளிதாக கண்டறிந்து பயணிக்க முடியும். இத்துடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மியூசிக் பிளேபேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    லீஇகோ ஸ்மார்ட் மிதிவண்டியுடன் வாக்கி-டாக்கீ தகவல் தொடர்பு முறையையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லீஇகோ  ஸ்மார்ட் மிதிவண்டிகளை பயன்படுத்துவோருடன் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் இதற்கென வழங்கப்பட்டுள்ள செயலியையும் பயன்படுத்தலாம். இத்துடன் GPS/GLONASS, மற்றும், உடல் நடவடிக்கையை டிராக் செய்து தகவல் வழங்கும் பல்வேறு சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது.  

    ஸ்மார்ட்போன் மற்றும் ஃபின்டஸ் பேன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு லீஇகோவின் புதிய ஸ்மார்ட் மிதிவண்டி புதிய மாற்று சாதனமாக இருக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட் மிதிவண்டியின் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×