என் மலர்
புதிய கேஜெட்டுகள்
தற்சமயம் வெளியாகியுள்ள டிரேட்மார்க் தகவல்களில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இதன் அம்சங்களும் வெளியாகியுள்ளது.
சியோல்:
இண்டர்நெட்டில் வெளியாகியுள்ள புதிய டிரேட்மார்க்கல், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டிரேட்மார்க் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் கேலக்ஸி X பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படம் இடம் பெற்றுருந்தது. எனினும் இந்த புகைப்படம் போலியானதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.

முன்னதாக வெளியான தகவல்கலில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக டிஸ்ப்ளேக்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனில் வளையும் வசதி கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி X ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி X மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும் சாதாரண நிலையில் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும். சாம்சங் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாகவே தயாரிப்பில் இருந்து வருகிறதும் குறிப்பிடத்தக்கது.
சீன டெலிகாம் நிறுவனமான ZTE உலகின் முதல் 5G ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. உலக சந்தையில் இந்த தொழில்நுட்பம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது.
பீஜிங்:
தொழில்நுட்ப சந்தையில் முதல் முறையாக 5G திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை ZTE எனும் சீன நிறுவனம் வெளியிட்டுள்ளது. ZTE ஜிகாபிட் மின்னல் வேக மொபைல் நெட்வொர்க் ஆன 5G சேவைகள் உலகெங்கிலும் 2020 ஆம் ஆண்டு வாக்கில் பரவலாக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் நொடிக்கு 1ஜிபி (1 Gbps) என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்கும்.
தற்சமயம் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி 5G தொழில்நுட்பத்தில் இன்றைய 4G நெட்வொர்க்களை விட பத்து மடங்கு வேகமான சேவையை அனுபவிக்க முடியும். பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 360 டிகிரியில் பானாரோமிக் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ மற்றும் அல்ட்ரா ஹை-ஃபை மியூசிக் மற்றும் வீடியோக்களை மின்னல் டவுன்லோடு செய்ய முடியும்.
புதிய சாதனத்தின் மூலம் மக்களின் இண்டர்நெட் பயன்பாடு முற்றிலும் மாறிவிடும். 5G தொழில்நுட்பங்களுக்கான முன்னுரிமை வழங்குவதே ZTE நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கும் என ZTE நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் மாறிவரும் நெட்வொர்க்களுக்கு ஏற்ப சாதனங்களை வடிவமைத்து வருகின்றனர். இவை திரைப்படங்களை நேரடியாக டிவியில் இருந்து மொபைல் போன்களுக்கு ஸ்ட்ரீம் செய்ய வழி செய்யும். தென்கொரியாவின் KT கார்ப் நிறுவனம் 5G சோதனைகளை 2018 ஆம் ஆண்டு வாக்கில் நடத்த திட்டமிட்டுள்ளது.
வணிக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தின் விநியோகம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் என்ற போதும் தற்போதைய சூழலில் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கைாயளர்கள் பயன்படுத்த முடியாது. இதில் வழங்கப்பட்டுள்ள 5G வசதி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்டவை வணிக ரீதியாக வாடிக்கையாளர்களிடம் சென்றடைய இன்னும் சில ஆண்டுகளாகும் என்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
ஹூவாய் P10 மற்றும் P10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஹூவாய் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 கிளாசிக் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 கிளாசிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் செல்லுலார் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு பே வசதி வழங்கப்பட்டுள்ளது. ஹூவாய் வாட்ச் 2 EUR 329 அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு ஆண்ட்ராய்டு வியர் 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் ஹூவாய் வாட்ச் 2 மார்ச் மாதம் துவங்குகிறது.
முன்னதாக ஹூவாய் வாட்ச் 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு 2.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளதால் பல்வேறு புதிய அம்சங்களும், வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. எல்டிஇ, நானோ சிம் கார்டு வசதி, என்எஃப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் வாட்ச் 2 கிளாசிக் மாடலில் மெட்டல் சேசிஸ், வாட்ச் 2 பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு வாட்ச்களிலும் 1.2 இன்ச் வட்ட வடிவ டிஸ்ப்ளே, 420 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி இரண்டு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் இரண்டு பிரத்தியேக பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டிராப்களை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன நிறுவனமான டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பிளாக்பெரி கீஓன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பார்சிலோனா:
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெரி கீஓன் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நாடுகளில் முதலில் விற்பனைக்கு வரும் பிளாக்பெரி கீஓன் 549 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் IPS 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி சோனி IMX3778 சென்சார், டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற கேமரா கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யுஎஸ்பி டைப்-சி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3505 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்க குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்பட்டுள்ளது.
4ஜி, வை-பை, NFC, GPS, ப்ளூடூத் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் ஸ்மார்ட் குவெர்டி கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டின் ஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி கொண்ட Mi செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் மற்ற சந்தைகளில் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
பீஜிங்:
சியோமி நிறுவனம் சீன சந்தையில் இரு புதிய சாதனங்களை (டிவைஸ்) வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. Mi செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் என அழைக்கப்படும் இந்த சாதனதம் 2 இன் 1 சாதனமாக பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது புகைப்படங்களை எடுக்க இந்த சாதனம் பயனுள்ளதாக இருக்கிறது.
இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கும் இந்த செல்ஃபி ஸ்டிக் மிகவும் எளிதாக கையில் எடுத்து செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் ரிமோட் வசதி கொண்டுள்ள இந்த செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் பயனாளிகளை சில அடி தூரத்தில் இருந்தும் புகைப்படம் எடுக்க ஏதுவாக இருக்கிறது.
ப்ளூடூத் ரிமோட் ஆண்ட்ராய்டு 4.3 அல்லது இதையும் விட மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்கள் மற்றும் ஐஎஸ் 5.0 அல்லது இதை விட மேம்படுத்தப்பட்ட இயங்குதள பதிப்புகளில் இணைந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணங்களின் போது வசதியாக எடுத்து செல்ல ஏதுவாக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி ஸ்டிக் எடை மிகவும் குறைவு என்பதால் சௌகரியமாக பயன்படுத்த முடியும். அலுமினியம் அல்லாய் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதன் தரம் மிகவும் உறுதியானதாக உள்ளது.
சீன சந்தையில் புதிய Mi செல்ஃபி ஸ்டிக் டிரைபாட் விலை CNY 89 அதாவது இந்திய மதிப்பில் ரூ.900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இதர நாடுகளில் இந்த சாதனத்தை வெளியிடுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 இல் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் புதிய ஐபோனின் செல்ஃபி கேமரா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோனில் பெசல்-லெஸ் OLED டிஸ்ப்ளே, கிளாஸ் பின்புறம் மற்றும் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் அம்சங்கள் சார்ந்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி புதிய ஐபோனில் அனைவரையும் வியக்க வைக்கும் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் ன கூறப்படுகிறது. இதன் செல்ஃபி கேமராவில் இன்பிராரெட் மாட்யூல் மற்றும் 3D வடிவில் புகைப்படங்களை பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் வன்பொருள் 2D படங்களை அதிக துல்லித்துடன் இணைக்க வழி செய்யும். இதே வன்பொருள் கேமிங், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கும்.
ஐபோன் 8 மேம்படுத்தப்பட்ட 3D செல்ஃபி கேமரா, இன்ப்ராரெட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும், மொத்தமாக செல்ஃபி கேமரா சோனி நிறுவனம் தயாரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய ஐபோனில் ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படும் மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 3ஜிபி ரேம் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டலாம். இதோடு இந்த ஐபோன் இதுவரை வெளியான ஐபோன்களை விட விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபோன் 8 வெளியாக இருக்கும் நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம்.
வழக்கத்தை விட சில மாதங்கள் முன்னதாகவே ஐபோன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு துவங்குகிறது என்றும், இம்முறை 300 சதவிகிதம் வரை கூடுதலான சாதனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலாண்டு மொத்த ஐபோன்களின் எண்ணிக்கை 45 மில்லியனில் இருந்து 48 மல்லியன் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையி்ல் ஐபோன் 8 தயாரிப்பிற்காக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7s மாடல்களின் தயாரிப்புகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் எவ்வித கண்ணாடியையும் உறுதியானதாக்கும் இரசாயனத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இருந்தால் உங்களின் பொருட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நிச்சயம் எனலாம்.
சென்னை:
எந்நேரமும் நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்கள், நம் கையில் இருந்து பலமுறை தவறி கீழே விழலாம். இதற்கெனவே பலரும் ஸ்மார்ட்போன்களை பாதுகாக்கும் புரோடெக்ஷன் கவர்களை பயன்படுத்துவர். அப்படியும் போனின் திரையை உடையாமல் பார்த்து கொள்வது கடினமான ஒன்று தான் எனலாம்.
இன்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பலர் உடைந்த அல்லது கீறல் விழுந்த திரை கொண்ட சாதனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலருக்கு பொருட்கள் கையில் நழுவாமல் இருக்காது. அவ்வாறானவர்களுக்கான பிரத்தியேக கண்டுபிடிப்பு தான் புரோடெக்ட் பேக்ஸ் (protect-pax).
சிறிய பாக்கெட்களில் கிடைக்கும் நீர் துளிகள் தான் புரோடெக்ட் பேக்ஸ். உங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட், மானிட்டர், கண்ணாடி என அனைத்து வித சாதனங்களிலும் புரோடெக்ட் பேக்ஸ் பயன்படுத்த முடியும். இதை எப்படி பயன்படுத்துவது?

முதலில் சாதனத்தை இந்த பாக்கெட்டில் வழங்கப்பட்டுள்ள துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின் அதனுள் இருக்கும் திரவ துளிகளை திரையின் நடுவே விட்டு பின் கை விரல்களால் நன்கு துடைத்து, பத்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்ததும் உங்களது திரை உறுதியானதாகி விடும். அதில் அவ்வளவு எளிதாக கீறல் விழாது, தண்ணீர் சிந்தினாலும் வழுக்கி போகும், கீழே விழுந்தாலும் அவ்வளவு எளிதில் உடையாது.
புரோடெக்ட் பேக்ஸ் எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்.
சிறிய அளவில் இருந்து பெரியதாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்ட டேப்லெட் பற்றி சிந்தித்துள்ளீர்களா? விரைவில் உங்கள் விருப்பம் போல் அளவை மடித்து, மீண்டும் நீட்டித்துக் கொள்ளக் கூடிய டேப்லெட் வெளியாக இருக்கிறது.
மிக்சிகன்:
மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் நீட்டிக்கக்கூடிய முதல் இன்டிகிரேட்டெட் சர்கியூட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இன்க்ஜெட் பிரின்டர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சர்கியூட் குறைந்த விலையில் ஸ்மார்ட் துணியாக அதிக எண்ணிக்கையில் தயாரிக்க முடியும்.
'அச்சடிக்கும் செய்தி தாள்களின் விலையில் வளையும் தன்மை கொண்ட மின்சாதனங்களை உருவாக்க முடியும். எங்களின் அடுத்த பணி விரைவில் அச்சடிக்கும் டிஸ்ப்ளேக்களை உருவாக்குவது தான். அச்சடிக்கும் டிஸ்ப்ளேக்கள் பெரிய அளவிற்கு நீட்டித்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதே போல் அணியக்கூடிய மின்சாதனங்களையும், மென்மையான ரோபோ செயலிகளையும் தயாரிக்க முடியும்.' என மிக்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் சுவான் வாங் தெரிவித்துள்ளார்.
சாதாரண பிரின்ட்டர் மூலம் தயாரிக்க முடியும் என்பதால் தற்போது இருக்கும் விலை உயர்ந்த தொழில்நுட்பங்களை விட மலிவு விலையில் இதனை தயாரிக்க முடியும். பல்வேறு சிறிய மற்றும் கிரம சேர்மங்களால் இந்த ஸ்மார்ட் துணி தயாரிக்கப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இதன் முழு சாதனமாக உருவாக்கும் பணிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இந்த ஸ்மார்ட் துணி வணிக ரீதியில் வியாபாரம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இண்டர்நெட் வசதி வழங்கும் வை-பை போன்றே மின்சாதனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
பிட்ஸ்பர்க்
இன்றைய ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் புதிய தொழில்நுட்ப வசதியாக பார்க்கப்படும் நிலையில் மின்சாதனங்களுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்யும் வழிமுறையினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டிஸ்னீ ரிசர்ச் கண்டறிந்துள்ள புதிய வழிமுறை சிறிய அறையினுள் வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை பரிமாற்றம் செய்கிறது. இதன் மூலம் மின்சாதனங்களை வை-பை மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவதை போன்று சார்ஜிங் செய்யலாம்.
குவாசிஸ்டாடிக் கேவிட்டி ரெசோனான்ஸ் (quasistatic cavity resonance - QSCR) எனும் வழிமுறையின் மூலம் 16 க்கு 16 அளவு கொண்ட ஆய்வு அறையில் புதிய வயர்லெஸ் சார்ஜிங் முறையினை ஆய்வாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்யதுள்ளனர்.
அவர்கள் காந்த அலைகளை பாதுகாப்பாக அறையினுள் நிலைநிறுத்தி, அவற்றை பயன்படுத்தி செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களை சார்ஜ் செய்ய வழி செய்துள்ளனர்.
முதற்கட்ட சோதனைகளில் 1.9 கிலோவாட் மின்சக்தியை பரிமாற்றம் செய்யமுடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 320 ஸ்மார்ட்போன்களுக்கு சக்தியூட்ட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கேலக்ஸி X1 மற்றும் கேலக்ஸி X1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் லீக் ஆகியுள்ளது.
சியோல்:
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனினை இப்போதைக்கு வெளியிடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சாம்சங்-இன் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவ்வப்போது மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி X1 மற்றும் கேலக்ஸி X1 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மடிக்கும் வசதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி சாம்சங் கேலக்ஸி X1 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளமும், X1 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளமும் கொண்டிருக்கும் என தெரிகிறது.

சாம்சங் பதிவு செய்துள்ள காப்புரிமைகளை வைத்து பார்க்கும் போது கேலக்ஸி X ஸ்மார்ட்போனில் இரண்டாவது அல்லது மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. காப்புரிமை தகவல்களின் படி ஸ்மார்ட்போன் ஒவ்வொரு முறையும் மடிக்கும் போதும் இரண்டாவது திரை ஆன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் நடுவே மடிக்கக் கூடிய பகுதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனினை ஃபிளிப் செய்ய உதவும்.
இந்த ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் மடிக்கும் போது 7.0 இன்ச் திரை கொண்ட டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும். 2016 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வரும் இந்த தொழில்நுட்பத்தில் சிறு கோளாறு இருப்பதால் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி X1 மற்றும் கேலக்ஸி X1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அணியக் கூடிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜீப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 100 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்வாட்ச் குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான (wearable devices) சந்தையில் புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் டைம் 100 என்ற பெயர்கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 64MB RAM மற்றும் 32MB இன்டெர்னல் மெமரியுடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெமரியை கூடுதலாக 32GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பேட்டரி 150 மணிநேரங்களுக்கு செயல்படும் தன்மையும், அதேவேளை ப்ளூடூத்தில் 3 மணிநேரங்கள் டாக் டைமையும் வழங்குகிறது. ஸ்மார்ட் டைம் 100 ஸ்மார்ட்வாட்ச்-இல் 3.9 செ.மீ அளவுள்ள தொடுதிரை டிஸ்ப்ளே மற்றும் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ சிம்மை பொருத்தி, ஸ்மார்ட்வாட்ச்சை தனியே செயல்படக்கூடிய சாதனமாக பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட் டைம் 100 ஸ்மார்ட்வாட்ச்-இல் அழைப்புகளை எளிதாக கையாளுவதற்கு ஏதுவாக ZEB-BH502 என்ற பெயரில் ஒரு ப்ளூடூத் ஹெட்செட்டும் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் டைம் 100 ஸ்மார்ட்வாட்ச் சிம் கார்டு பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளதால் இதனை எந்த ஒரு ஸ்மார்ட்ஃபோனும் இல்லாமலும் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் டைம் 100 ஒரே ஸ்வைப் மூலமாக அழைப்புகளை எடுக்கவும், பதிலளிக்கவும் வசதியான ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பீக்கர் உங்களது கைகளை அடிக்கடி காது அருகில் கொண்டு செல்லவே அவசியம் இல்லாமல் அழைப்புக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் போதுமான அளவுக்கு சத்தத்துடன் இருக்கிறது.
இதன் சௌகரியத்தை அதிகப்படுத்த ப்ளூடூத் ஹெட்செட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை எடுக்க அல்லது பதிலளிக்க முடியும். யார் அழைக்கிறார் என்பது குறித்து உங்களுக்கு தெரிவிப்பதோடு, எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மற்றும் அதிகமான விஷயங்களை தெரிவிக்கிறது.
தொடுதிரை டிஸ்பிளே, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயரைப் பயன்படுத்தி வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் பாடல்களைக் கேட்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள மைக், ஆன்டி லாஸ்ட், மேஜிக் வாய்ஸ், கால் ரெகார்டிங், பிரவுசர், வைபரேஷன், ரிமோட் கேப்சர், எஸ்.எம்.எஸ், எஃப்.எம் ஆகிய அனைத்தும் ஸ்மார்ட் டைம் 100 சாதனத்தைப் பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாறுபட்டதாக்குகிறது.
மேலும் இதில் கேமராவும் வழங்கப்பட்டுள்ளதால் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:
மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மேலும் தாமதமாகும் என தெரிகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ப்ரோடோடைப் கான்செப்ட்களை மட்டும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தென்கொரிய செய்தி வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவ்வாறு வெளியாகியிருக்கும் தகவல்களில், மடிக்கும் திறன் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களின் ப்ரோடோடைப் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் சாம்சங் நிறுவனம் பல்வேறு மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாகவும், இவை உள்-பக்கம் மற்றும் வெளி-பக்கம் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் சாம்சங் நிறுவனம் விரைவில் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல்களை உறுதி செய்வது குறித்து சாம்சங் எவ்வித பதிலும் வழங்கவில்லை.
சாம்சங் மடிக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி X என்ற பெயரில் மடிக்கும் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இதோடு இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி X ஸ்மார்ட்போனில் 2017 ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதனை திறக்கும் போது 7.0 இன்ச் திரை கொண்ட டேப்லெட் சாதனம் போன்று பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதன் திரை குறித்து அவ்வப்போது பல்வேறு வேறுபட்ட தகவல்கள் வெளியாகின்றன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யாது என்றும் கேலக்ஸி டேப் S3 சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.






