என் மலர்
மொபைல்ஸ்

பண்டிகை கால விற்பனையில் சாம்சங் அதிரடி - இத்தனை யூனிட்களா?
- இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு விற்பனையை நடத்தி வருகின்றன.
- பண்டிகை கால விற்பனையில் சாம்சங் நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி முன்னணி ஆன்லைன் வலைதளங்கள் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விற்பனையில் சாம்சங் நிறுவனம் அமோக வரவேற்பை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய பண்டிகை கால விற்பனையில் சாம்சங் நிறுவனம் 26 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட விற்பனையில் சாம்சங் நிறுவனம் சுமார் 33 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. இதில் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களான கேலக்ஸி S21 FE, கேலக்ஸி S22 அல்ட்ரா, கேலக்ஸி S22 பிளஸ், கேலக்ஸி Z ப்ளிப் 3 மாடல்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது.
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் துவங்கி கேலக்ஸி F13 மற்றும் கேல்கஸி M13 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருந்தது. சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளான சியோமி மற்றும் ரியல்மி விற்பனையில் முதல் மூன்று இடங்களில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. இரு நிறுவனங்களும் முறையே 25 லட்சம் மற்றும் 22 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.
இதன் மூலம் இரு நிறுவனங்களும் முறையே 20 சதவீதம் மற்றும் 17 சதவீத பங்குகளை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் பண்டிகை கால விற்பனையில் சாம்சங் நிறுவனம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு வழங்கப்பட்டது. எனினும், முதல் மூன்று இடங்களில் ஐபோன் 13 இடம்பெறவில்லை. இந்த ஆண்டு விற்பனையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ள போதிலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை இரண்டு சதவீதம் சரிவடைந்துள்ளது.






