search icon
என் மலர்tooltip icon

    கணினி

    விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பிளே ஸ்டேஷன் 5 - எத்தனை யூனிட்கள் தெரியுமா?
    X

    விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பிளே ஸ்டேஷன் 5 - எத்தனை யூனிட்கள் தெரியுமா?

    • அதிவேகமாக விற்பனையான சோனி நிறுவன கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியுள்ளது.
    • சோனியின் பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன.

    சோனி நிறுவனம் கேமிங் கன்சோல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியது. உலகம் முழுக்க பிளே ஸ்டேஷன் 5 விற்பனையில் 40 மில்லியன் யூனிட்களை எட்டி அசத்தி இருக்கிறது. நவம்பர் 2020 வாக்கில் விற்பனைக்கு வந்த பிளே ஸ்டேஷன் 5, வெறும் எட்டு மாதங்களில் 10 மில்லியன் யூனிட்கள் விற்பனையை கடந்து அசத்தியது.

    இதன் மூலம் சோனி நிறுவனம் தனது முந்தைய கேமிங் கன்சோல்களின் விற்பனை பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக விற்பனையான கேமிங் கன்சோலாக பிளே ஸ்டேஷன் 5 மாறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனையில் 30 மில்லியன் யூனிட்களை கடந்தது. இது புதிய கேமிங் கன்சோல் உலகளவில் கேமர்களை கவர்ந்து வருவதை உணர்த்தி இருக்கிறது.

    2022 துவக்கம் வரை சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 4 மற்றும் பிளே ஸ்டேஷன் 2 மாடல்களை முறையே 117 மில்லியன் மற்றும் 157 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. 100 மில்லியன் யூனிட்கள் எனும் எண்ணிக்கையை அடைய பிளே ஸ்டேஷன் 4 ஆறு ஆண்டுகளை எடுத்துக் கொண்ட நிலையில், பிளே ஸ்டேஷன் 5 இந்த மைல்கல்லில் கிட்டத்தட்ட பாதியை மூன்று ஆண்டுகளுக்குள் எட்டியது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 மாடல் 100 மில்லியன் யூனிட்களை அதிவேகமாக கடந்துவிடும் என்று தெரிகிறது.

    சந்தையில் அமோக வரவேற்பை பெற்ற நிலையிலும், பிளே ஸ்டேஷன் 5 மாடலுக்கு ஆரம்பத்தில் வினியோகம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

    சமீபத்தில் தான் சோனி நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 மாடலின் டிஸ்க் வேரியன்டிற்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி அறிவித்தது. இந்த தள்ளுபடி ஜூலை 25-ம் தேதி துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×