search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் மரம்"

    கோவையில் மேலும் 25 இடங்களில் ‘வைபை’ வசதியுடன் ஸ்மார்ட் மரம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் இலவச ‘வைபை’ வசதியுடன் தங்க நிறத்திலான ஸ்மார்ட் செயற்கை மரம் அமைக்கப்பபட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஸ்மார்ட் மரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பட்டனை அழுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொது மக்களின் வசதிக்காக வ.உ.சி. மைதானத்தில் ‘வைபை’ வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் மேலும் 25 இடங்களில் ‘வைபை’ வசதியுடன் ஸ்மார்ட் மரங்கள் அமைக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடை பெற்று வருகிறது. கோவைக்கு எந்த திட்டம் கேட்டாலும் அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஸ்மார்ட் மரம் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள். தனியார் பங்களிப்புடன் இந்த மரம் அமைக்கப்பட்டு உள்ளதால் மாநகராட்சிக்கு செலவு கிடையாது. விளம்பர பலகைகள் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

    இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் ரூ.30 லட்சம் செலவில் ‘வைபை’ வசதியுடன் தங்கநிறத்தில் ஸ்மார்ட் மரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உட்காருவதற்காக இருக்கை வசதி, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 350 மீட்டர் சுற்றளவுக்கு ‘வைபை’ வசதி கிடைக்கும்.

    சூரிய சக்தி மூலம் மின்சக்தி கிடைக்கவும், மழைநீர் சேகரிப்பு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. ஜே.சி. மீடியா மாநகராட்சியுடன் இணைந்து இதை செயல்படுத்தி வருகிறது. மாநகராட்சி இடம் அளித்து உள்ளது. இதற்காக மாநகராட்சிக்கு ஆண்டு வருமானமாக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் தனியார் நிறுவனம் மூலம் கிடைக்கும். அரசுக்கு ஆண்டு வருமானமாக ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி, உதவி கமிஷனர் செந்தில் ரத்தினம், என்ஜினீயர் லட்சுமணன், நகர திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணன், காட்டூர் செல்வராஜ், பகுதி செயலாளர் வக்கீல் விமல்சோமு, பப்பாயா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×