search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன அலுவலர்கள்"

    குடியாத்தத்தில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த 11 காட்டு யானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. இதில் வாழை மரங்கள் சாய்ந்தது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் குத்துஷ் (வயது 56). இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் தனகொண்ட பள்ளியில் உள்ளது. அந்த 5 ஏக்கரில் வாழை பயிரிடபட்டு வாழைகள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் ஆந்திர வனபகுதியில் இருந்து 8 பெரிய யானை 3 குட்டியானை உள்பட 11 காட்டு யானைகள் இன்று அதிகாலை 2,30 மணிக்கு அவரது தோட்டத்தில் புகுந்தது. அங்கு 1 மணி நேரம் துவம்சம் செய்த யானைகள் வாழை தோட்டத்தினை நாசப்படுத்தியது.

    இதில் வாழை மரங்கள் சாய்ந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி குத்துஷ் யானைகளை கண்டு மிரண்டு போனார்.

    இது குறித்து குடியாத்தம் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். வன அலுவலர் மகேந்திரன், வனவர் ரவி, காப்பாளர் பூபதி, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

    அந்த யானைகள் ஆம்பூரான்பட்டி, தீர்த்தமலை பகுதிக்கு சென்றது. செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் துவம்சம் செய்தது. தற்போது யானைகள் தீர்த்த மலையில் முகாமிட்டு உள்ளது. இந்த யானைகளை ஆந்திர வனபகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×