search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்களின் வேகம்"

    • ரெயில் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிக்னல், எச்சரிக்கை பலகைகள் பளிச்சென சுத்தப்படுத்திட வேண்டும்.
    • குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது.

    திருப்பூர் : 

    பனிமூட்டத்தால் ரெயில்கள் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 60 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வரும் ரெயில்கள் இனி 75 கி.மீ., வேகத்தில் சூழலுக்கு ஏற்ப இயக்கப்படும். இதற்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு ரெயில் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிக்னல், எச்சரிக்கை பலகைகள் பளிச்சென சுத்தப்படுத்திட வேண்டும்.

    விபத்து ஏற்பட வாய்ப்புள்ள சந்திப்பு, சிக்னல், வளைவில் மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் ஒளிரும் விதமாக கோடுகள் வரையப்பட்ட பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கோடுகள் நன்றாக தெரியும் வகையில் அவற்றின் மீது மீண்டும் ஒருமுறை வர்ணம் தீட்ட வேண்டும்.

    டைவர்ஷன் மற்றும் கி.மீ., யை குறிப்பிடும் கற்களில் சுண்ணாம்பு அடித்து அடையாளப்படுத்தி காட்ட வேண்டும். பனிமூட்ட காலம் மேலும் தீவிரமாகும் முன்பே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வடமாநிலத்தில் தொடரும் பனிப்பொழிவு, அடுத்தடுத்த நிலையங்களில் சிக்னல் கிடைப்பதில் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோர்பா - கொச்சுவேலி வாராந்திர ரெயில் (22647) காலை, 5:45மணிக்கு திருப்பூருக்கு வர வேண்டியது. 9 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக மாலை 3:25 மணிக்கு கடந்து சென்றது. வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் தொடர்ந்து தாமதமாக வந்து சேருவது குறிப்பிடத்தக்கது.

    கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 26ந்தேதியில் இருந்து அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதி நவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும் இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலே குறைக்கப்பட்டுள்ளது.

    முன்பு 11 பெட்டிகளில் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால் 320 ஸ்லீப்பர் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

    இதேபோல வேறு சில ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறைரெயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் ஸ்லீப்பர் பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரெயில் தென்மேற்கு ரெயில்வேயால் இயக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய ரெயில்வேயால் இயக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரெயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×