search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தமிழ்செல்வி"

    • எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
    • முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைய தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இலக்கை அடைபவர்கள் வெற்றியாளர்களாகவும், தவறவிட்டவர்கள் அனுபவ சாலியாகவும் மாறுகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்க ஆர்வம் ஏற்படும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க சிறுவயதில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் கனவு விரைவில் நனவாக உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் தவசியம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வருகிறது. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த 8-ந்தேதி மகளிர் தினத்தன்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ் செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோல் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியையும் தனி பெண்ணாக சென்று முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டி அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    அதன்படி தற்போது முத்தமிழ் செல்வி உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க நிதி உதவியாக தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    இது குறித்து முத்தமிழ் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை முடித்துள்ளேன். அடுத்த கட்ட இலக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைவது தான். அதன் உச்சியை அடையும் முதல் தமிழ் பெண்ணாக இருந்து சாதனை படைப்பேன். இந்த சாதனையை செய்வதற்கு நிதி உதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    எவரெஸ்ட் சிகர பயணத்தை 5-ந் தேதி மேற்கொள்ள உள்ளேன். இதற்காக 2-ந் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரம் அடைவதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×