search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு"

    செய்யாறு கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்தார்.
    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் ரூ.86 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி செய்யாறு ஒருங்கிணைந்த கோர்ட்டில் ரூ.15 லட்சத்தில் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கோர்ட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் ராஜ்மோகன், சுந்தரபாண்டியன், ஜெயஸ்ரீ உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    வடமணப்பாக்கம் கிராமத்தில் மழையினால் வீடு இடிந்து விழுந்து பிரியாமணி (வயது 7) என்ற சிறுமி பலியானார். இதையறிந்த மாவட்ட முதன்மை நீதிபதி அந்த கிராமத்துக்கு சென்று குடிசை வீட்டினை பார்வையிட்டு உறவினர்களிடம் விபத்து குறித்து விசாரித்தார். மேலும் அங்கிருந்தவர்களிடம் குடிசை வீடுகளில் தங்க வேண்டாம், அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்க அறிவுறுத்தினார்.

    இதையடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெரும் துளசி என்பவரின் மனைவி லட்சுமி (37), மகள்கள் பிரியதர்ஷினி (15), தமிழ்பிரியா(3) ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த் துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் நிதியினை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் வழங்கினார்.

    அப்போது செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், வெம்பாக்கம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
    ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நடத்திய ஆய்வில் அன்னதான திட்டத்தில் குறைபாடு உள்ளதையும், வருகைப் பதிவேடு சரிவர பராமரிப்பு இல்லாததையும் கண்டறிந்தார்.
    திருவண்ணாமலை:

    இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகனம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கோவில் ராஜகோபுரத்தின் முன்பு கடைகள் உள்ள இடத்தை பார்வையிட்டபோது அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. மேலும் பக்தர்களின் பொருட்கள் வைப்பு அறையை பார்வையிட்டபோது அங்கு 3 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு மோட்டார்சைக்கிளில் பதிவெண் இல்லாமல் இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

    பின்னர் ராஜகோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நீதிபதிகள் வந்தனர். கோவில் முன்பகுதியில் ஒரு நாய் படுத்து இருந்தது. மேலும் அங்கு பலர் படுத்து கிடந்ததை அவர்கள் பார்த்தனர்.

    அதே பகுதியில் அன்னதானத்திற்காக பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்னதான திட்டத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்த நீதிபதிகள், அன்னதானம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர்களிடம் போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா, சாப்பாடு தரமாக உள்ளதா, ஏதேனும் குறைகள் உள்ளதா என்று நீதிபதிகள் கேட்டனர். பின்னர் சமையல் செய்யும் அறையை பார்வையிட்டனர்.

    அதைத் தொடர்ந்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு நீதிபதிகள் சென்றனர். அங்கு இணை ஆணையர் ஞானசேகரிடம் கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை டி.வி.யில் காண்பிக்க கூறினர். அப்போது “கோவில் ராஜகோபுரத்தின் முன்பு நாய் படுத்து இருப்பதையும், சிலர் படுத்து தூங்குவதையும் காண்பித்து மக்கள் நடமாடும் பகுதியில் இப்படி உள்ளது. இதை நீங்கள் கவனிக்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

    பின்னர் ஊழியர்களின் வருகை பதிவேட்டை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். வருகைப் பதிவேட்டில் உள்ள நபர்களின் பெயர்களை கூறி நீதிபதிகள் அழைத்தனர். அப்போது வந்தவர்கள் அடையாள அட்டையின்றியும், சீருடை அணியாமலும் இருந்து உள்ளனர். இது குறித்து கோவில் இணை ஆணையரிடம் நீதிபதிகள் விசாரித்தனர்.

    பின்னர் அன்னதான திட்டத்திற்கான பதிவேடுகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அந்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாததை பார்த்த நீதிபதிகள், கோவில் இணை ஆணையரிடம் அது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். கோவிலில் உள்ள கோசாலை, பிரசாதம் வழங்கும் இடம், அம்மணி அம்மன் கோபுரத்தின் வெளிப்புறம், கோவிலில் உள்ள கருணை இல்லம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பக்தர் ஒருவர் “அன்னதான திட்டத்தில் சாப்பிடுபவர்களுக்கு சரியாக சாப்பாடு வழங்குவதில்லை” என்று புகார் கூறினார். அதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து கோவிலில் பக்தர்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்படுகிறார்களா? என்றும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறுகையில், “ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் சுகாதாரம் சரி செய்யப்படவில்லை. பெண்கள், பெண் குழந்தைகள், முதியவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும் கோவில் அன்னதான திட்டத்திற்கான பதிவேடுகள், வருகைப் பதிவேடுகள் போன்ற ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. இது குறித்து உயர்நீதிமன்றத்திற்கு வருகிற 30-ந் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது” என்றார்.
    ×