search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை மக்கள்"

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுவை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #Narayanasamy #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கை அரசியல் சாசன 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது.

    மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவில் கவர்னர் தலையிட முடியாது என்றும் அரசின் அன்றாட நடவடிக்கைகளிலும் கவர்னர் தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என நாங்கள் கூறியபோது, மத்திய உள்துறை அமைச்சகம் மாற்று கருத்தை வெளியிட்டது.

    அதோடு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் சீனியர் வக்கீல்கள் ப.சிதம்பரம், வேணுகோபால், சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இன்று இவ்வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

    நிர்வாகம், அரசு அதிகாரிகள் நியமனம், நிதி அதிகாரம் ஆகியவற்றில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

    இதன்மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது. 3 ஆண்டாக நாங்கள் போராடிய போராட்டத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக ஊடகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வந்தேன். இதை உறுதி செய்யும் வகையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த தீர்ப்பு புதுவை மாநில வளர்ச்சிக்கும், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கவர்னரின் அதிகார கொட்டத்தை அடக்குவதற்கும் வழி வகுக்கும். நீதி வென்றுள்ளது. புதுவை மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு கவர்னரின் செயல்பாட்டிற்கு கிடைத்த பதிலடி.



    கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றாமல் தடுத்ததற்கும், முடக்கம் செய்ததற்கும் கவர்னர் கிரண்பேடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    காங்கிரஸ் அரசை முடக்குவதற்காக கவர்னர் கிரண்பேடியை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். எனவே, பிரதமர் மோடி இந்த தீர்ப்பிற்கு பதில் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #KiranBedi

    புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உள்ள பகுதியில் கடற்கரையை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பின்னர் புதுவை மாநிலத்தை தூய்மையாக வைப்போம் என பதாகையில் எழுதி முதல் அமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.

    பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடல் வளத்தை பேணி காப்பது நமது கடமை. நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதிகளவில் சுற்றுலா தளங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    ×