search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ராக்கெட்"

    புதிதாக 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO
    நாகர்கோவில்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன், தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளைக்கு நேற்று வந்தார். பின்னர், அவர் படித்த சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுமான பணிகளை இஸ்ரோ தலைவர் சிவன் பார்வையிட்டார். எவ்வளவு பணிகள் நிறைவடைந்து இருக்கிறது? இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது பற்றி சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக இஸ்ரோவும் முன்னேற்றம் கண்டு வருகிறது. உதாரணமாக செயற்கை கோள்களுக்கு தேவையான சோலார் செல்களை இந்தியாவிலேயே உருவாக்கி இந்திய செயற்கை கோள்களில் உபயோகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 40 ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    அதாவது 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும், 10 ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுகளும் உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. ராக்கெட்டுகள் உருவாக்கப்படுவதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இஸ்ரோ மூலமாக மாணவ-மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சரக்கல் விளையில் நான் படித்த பள்ளிக்கூடத்தில் புதிதாக ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மாணவ-மாணவிகள் கல்வி கற்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

    இஸ்ரோ தலைவர் சிவன் படித்த சரக்கல் விளை அரசு பள்ளி இஸ்ரோவுக்கு கீழ் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு மூலம் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் 4 வகுப்புகளுக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஸ்மார்ட் வகுப்பறையும் அடங்கும். இதற்காக பள்ளி வளாகத்தில் இருந்த பழைய ஓட்டு கட்டிடத்தை இடித்து அகற்றி அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.

    மேலும் கழிவறைகள், பள்ளியை சுற்றிலும் காம்பவுண்டு சுவர், மின் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. #ISRO #Tamilnews
    ×