search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழச்சாறு கடை"

    நாகை பகுதியில் உள்ள பழச்சாறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். இதில் அழுகிய பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகை பகுதியில் பல்வேறு இடங்களில் பழச்சாறு விற்பனை கடைகள் உள்ளன. இவற்றில் குளிர்சாதன பெட்டியில் வைத்தவாறு விற்கப்படும் பழச்சாறு விற்பனைக்கடைகளும் அதிக அளவில் உள்ளன. இந்த கடைகளில் கலவை பழச்சாறு(புரூட்மிக்சர்) தயாரிக்க பயன்படுத்தப்படும் பழங்கள் நல்ல நிலையில் உள்ளனவா? அல்லது கெட்டுப்போன பழங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதையடுத்து நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் நாகை, வெளிப்பாளையம் பகுதிகளில் உள்ள 5 பழச்சாறு விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளிப் பாளையம் பப்ளிக் ஆபிஸ்ரோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் கலவை பழச்சாறு தயாரிப்பதற்காக அழுகிப் போன பழங்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அழுகிப் போன பழங்கள் மற்றும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பழச்சாற்றினை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழிக்கப்பட்டது. பின்னர், ஆய்வு செய்யப்பட்ட பழச்சாறு விற்பனையாளர்களிடம் பழச்சாறு தயாரிக்க தரமான பழங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கையான பழச்சாறில் செயற்கை நிறமிகளை சேர்க்கக்கூடாது. பழச்சாறு தயாரிப்பவர்கள் தன்சுத்தத்தை பேண வேண்டும். விற்பனை நடைபெறும் இடத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். அனைத்து விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையிடம் பெறப்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 
    ×