search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கி செல்லும் மக்கள்"

    • நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    ஈரோடு:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் முழு அளவு உபரி நீரும், காவிரியில் திறக்கப்படுகிறது.

    கடந்த 5 நாட்களாக காவிரியில் அதிகமாக தண்ணீர் சென்றதால் ஈரோடு மாவட்ட காவிரி கரை ஓரங்களில் வசிப்போ ருக்கு வெள்ள அபாயம் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது. பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரையில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் நீர் சூழ்ந்தது.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 12 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு 700 பேர் வரை முகாமில் பாதுகா ப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய வசதியை மாவட்டம் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்க ப்பட்டது.

    கடந்த இரு தினங்களுக்கு முன், 1.95 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றது. நேற்று முன்தினம் இரவில், 65,000 கனஅடியாக குறைந்ததால் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு சென்றனர். ஈரோட்டில் மட்டும் 50 பேர் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்கு மீண்டும் அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் நேற்று மதியத்துக்கு பின் 65,000 கனஅடியில் இருந்து மாலை 4 மணிக்கு 95,000 கனஅடியாகவும், 5.30 மணிக்கு 1.05 லட்சம் கனஅடியாகவும் தண்ணீர் வெளியேற்றம் உயர்ந்துள்ளது. அத்துடன் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மழை நீரும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள 2,500 கனஅடி நீரும் காவிரியில் கலப்பதால் 1.10 லட்சம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் முகாம்களில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த மக்கள் இன்று மீண்டும் முகாம் நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

    தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றுக்கு மேலும் அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ×