search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பட்டறை கொள்ளை"

    • பட்டறையில் வடிவமைக்கப்படும் நகைகள் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும்.
    • நகைப்பட்டறையில் வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட வர்த்தகத்தில் பிரதான இடம் வகிப்பது மலைக்கோட்டை அருகிலுள்ள பெரியகடை வீதி. இங்கு ஏராளமான நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள் உள்ளன.

    24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக பெரியகடைவீதி இருந்து வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் என்று தினமும் லட்சக்கணக்கில் மக்கள் குவிவார்கள். மேலும் அந்த பகுதியில் நெருக்கமாக குடியிருப்புகளும் உள்ளன.

    இங்குள்ள சவுந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஏராளமான நகைப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. நகை தொழிலாளர்கள் இரவு, பகல் என்றும் எந்த நேரமும் பணியில் இருப்பார்கள்.

    அப்பேற்பட்ட இந்த பகுதியில் ஜோசப் என்பவரும் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அந்த பட்டறையில் வடிவமைக்கப்படும் நகைகள் திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜோசப் பணிகளை முடித்துவிட்டு தனது நகைப்பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வழக்கம்போல் பட்டறையை திறக்க வந்தார். அப்போது அங்குள்ள முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்குள்ள லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதற்குள் வைத்திருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் லட்சுமி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுலக்சனா உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நகைப் பட்டறையில் வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    இதில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை பிடித்து போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரங்கேறியுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×