என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் அறிஞர்கள் விருது"

    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது.
    • இலக்கிய மாமணி விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றுவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கும், 2023-ம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதன்படி, திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையில் திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணா விருது பெறுவோருக்கு (தலா ஒருவருக்கு) ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகின்றன. இலக்கிய மாமணி (3 பேருக்கு) விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகின்றன.

    தமிழ் வளர்ச்சி துறை விருதுகள் அடிப்படையில் தமிழ்த்தாய் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்துடன் கேடயமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறு புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது (10), சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது பெறுவோருக்கு (தலா ஒரு நபருக்கு) ரூ.2 லட்சத்துடன், தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்துடன் கேடயம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படுகிறது. 38 பேருக்கு (மாவட்டந்தோறும் ஒருவருக்கு) தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 75 பேருக்கு விருது அளிக்கப்பட இருக்கிறது.

    எனவே தகுதிவாய்ந்த தமிழ் அறிஞர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 'தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008' என்ற முகவரிக்கு தபால் மூலமாக அக்டோபர் 15-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். உரிய ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

    கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். அக்டோபர் 15-ந்தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×