search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா மேம்பாட்டு திட்டம்"

    • 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.
    • 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது.மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும் திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன்காட்சியகம், காண்டூர் கால்வாய் என சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திருமூர்த்திமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குறிப்பாக திருமூர்த்தி அணையின் கரையில் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்படுகிறது.கடந்த 2007ல் முதன்முறையாக அணைக்கரையில், பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பினர். பின்னர் பல கட்டங்களாக இக்கருத்துரு மாற்றியமைக்கப்பட்டது.முதற்கட்டமாக அணை கரையில் 1,700 மீட்டர் நீளத்திற்கு முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. முதலில் 45 லட்சம் ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.

    ஆனால் பூங்கா அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பணியும் இதுவரை துவங்கவில்லை.திருமூர்த்திமலையில் சுற்றுலா சார்ந்த மேம்பாட்டுத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொலிவிழந்து வருகிறது. சுற்றுலா சார்ந்த வர்த்தகம் முடங்கி அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அணையை ஒட்டிய பகுதி தரிசு நிலம் போல மாறியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறைக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவியது.

    அதற்கேற்ப மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் தலைமையில் ஒரு குழுவினர் பல முறை, திருமூர்த்திமலையில் ஆய்வு செய்தனர்.தன்னார்வலர்களை உள்ளடக்கிய சுற்றுலா வளர்ச்சிக்குழுவும் கடந்தாண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒரே ஒரு தகவல் பலகை மட்டும் காண்டூர் கால்வாய் அருகே வைக்கப்பட்டது. இவ்வாறு திருமூர்த்தி அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் திட்டம் அரசுத்துறைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாடு குறித்து தேர்தல் வாக்குறுதி வழங்குவது, தவறாமல் நடக்கிறது. தேர்தல் வெற்றிக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை.பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருமூர்த்திமலை வந்த அமைச்சர்களும் இத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடுவது தொடர்கதையாக உள்ளது.

    உடுமலை வட்டாரத்தை `இது திருமூர்த்திமலை மண்ணு'என பிற பகுதியினர் குறிப்பிடும் அளவுக்கு பெயர் பெற்ற திருமூர்த்திமலையின் மேம்பாட்டில் இனியாவது திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இதே போல் அமராவதி அணைக்கரையிலும் பூங்கா பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையங்களான திருமூர்த்திமலை, அமராவதி அணை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×