search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார சீர்கேடுகள்"

    • சுற்றுலா வாகனங்கள் ஆக்கிரமிப்பால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்
    • திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் சாலையில்

    திருச்சி:

    108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து ரெங்கநாதரை வழிபட்டு செல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோன்று விஷேச தினங்களில் பல்லாயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களும் வாகனங்களில் வருகை தருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலா பஸ்களில் வரும் பக்தர்கள் அம்மா மண்டபம் சாலை, தெப்பக்குளம் தெரு, மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறார்கள். இதற்கிடையே மங்கம்மா நகர் பிரதான சாலையில் இருபுறமும் சில நேரங்களில் சுற்றுலா வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி வைக்கிறார்கள். இது அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மங்கம்மா நகர் குடியிருப்பு வாசிகள் கூறும்போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுற்றுலா வாகனங்களில் வரும் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு ராஜகோபுரம் அருகாமையில் உள்ள மங்கம்மா நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். வாகனம் நிறுத்துவது பிரச்சினை கிடையாது. வாகனம் நிறுத்தப்பட்டதும் பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    டிரைவர்களும் இறங்கி அவர்களின் சொந்த வேலையாகவும், டீ குடிக்க மற்றும் பாத்ரூம் என சென்று விடுகிறார்கள். இவ்வாறு வாகனங்களை நிறுத்தி செல்பவர்களில் சிலர் நேராக வீட்டு வாசலுக்கு எதிர்ப்புறம் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளுக்குள் நிறுத்தியிருக்கும் தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லவும்,

    வீடு திரும்பும் போது உள்ளே வாகனத்தை நிறுத்துவதற்கும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

    அது மட்டுமில்லாமல் சுற்றுலா வாகனங்களில் வருபவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்க விடுகிறார்கள். பலர் வீதிகளை திறந்தவெளி கழிப்பறையாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் வாகனங்களில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு இலை மற்றும் உணவு கழிவுகளை வீட்டின் முன்பாகவே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.

    அதுமட்டுமின்றி வீதிகளில் வீசப்படும் உணவுப்பொருட்கள் பல நாட்கள் அப்புறப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசவும் செய்கிறது. மேலும் அதன் மூலம் கொசுக்கள், ஈக்கள் மொய்த்து தொற்று நோயை பரப்பும் அபாயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். சுற்றுலா வாகனங்கள் கண்ட கண்ட இடத்தில் நிறுத்தாமல் இருக்க பெரிய அளவுக்கு பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

    ×