search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச பயங்கரவாதி"

    மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. #MasoodAzhar #JeM #UNResolution #MEA
    ஜெனீவா:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

    இந்த சூழலில், ஜெனீவாவில் உள்ள  ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயாராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.



    ஐநாவுக்கு சீனா அனுப்பிய குறிப்பில், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது.  சீனா 4-வது முறையாக மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

    இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்ற, பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக உள்ளது.

    இந்திய குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாத குழுக்களின் தலைவர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான அனைத்து வழிமுறைகளையும் இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது.  #MasoodAzhar #JeM #UNResolution #MEA

    ×