search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவரை காப்பாற்றிய தஞ்சை பெண்"

    துபாயில் கொலை வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட கணவரை தஞ்சாவூரை சேர்ந்த பெண் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் மாலதி. ஏழை குடும்பத்தை சேர்ந்த இவரது கணவர் அர்ஜுண் ஆத்திமுத்து துபாயில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் துபாயில் வசித்துவந்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அப்துல்வாஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் அர்ஜுண் ஆத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்றது. முடிவில் அர்ஜுண் ஆத்திமுத்துவுக்கு கோர்ட்டு மரணதண்டனை விதித்தது. இது அவரது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    துபாய் நாட்டு சட்டப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலையாளியை தாங்கள் மன்னித்துவிட்டதாக கூறினால் அவரால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

    இதுபற்றி தெரிய வந்ததும் மாலதி மலப்புரத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு தனது கணவரை மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர்களும் மாலதியின் கணவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

    அதன்படி துபாயில் கொலையுண்ட அப்துல் வாஜித் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது அவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.30 லட்சம் கொடுத்தால் மன்னிப்பு வழங்குவதாக சமரசம் ஏற்பட்டது.

    ஆனால் ரூ.30 லட்சத்தை கொடுக்கும் அளவுக்கு மாலதிக்கு வசதி இல்லாததால் அவருக்கு உதவிகள் குவிந்தது. மலப்புரம் பகுதி மக்களும், வெளிநாடு வாழ் இந்திய மக்களும் இந்த பணத்தை வழங்கினார்கள். அந்த பணம் துபாயில் கொலையுண்டவர் குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். அந்த கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது அர்ஜுண் ஆத்திமுத்துவின் மரணதண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர் போன் மூலம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசவும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலதி தனது கணவரை மரணத்தில் இருந்து காப்பாற்ற உதவிய கேரள மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து உள்ளார். தனது உருக்கமான பேச்சை வீடியோவாக பதிவு செய்து கேரள முஸ்லிம் அமைப்பினருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
    ×