search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவில் எலி"

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது.
    • செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    பெங்களூரு:

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து பெங்களூருவில் நேற்று விவசாய சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு யஷ்வந்தபுரம் யார்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மதிய உணவாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதில் யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய தக்காளி சாதத்தில் செத்த எலி கிடந்தது.

    இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சாப்பாட்டை சாப்பிடாமல் தூக்கி வீசினர். இந்த தகவல் போலீசாருக்கு பரவியதால், மற்ற போலீசாரும் உணவை சாப்பிடாமல் குப்பையில் போட்டுள்ளனர். இந்த தக்காளி சாதம் யஷ்வந்தபுரத்தில் உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து போலீசாருக்கு வழங்கப்பட்டதும், அதில் தான் செத்த எலி கிடந்ததும் தெரியவந்தது. இந்த டிபன் சென்டரில் இருந்து 180 போலீசாருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து அறிந்ததும் யஷ்வந்தபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளை, பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுஜித் கடுமையாக கடிந்து கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.200 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் போலீசாருக்கு தரமான உணவு வழங்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பி டோஸ் விட்டுள்ளார். சம்பவம் பற்றி போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறுகையில், யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்த எலி கிடந்துள்ளது. முழுஅடைப்பையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கிய உணவிலேயே செத்த எலி கிடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. அந்த உணவை யாராவது சாப்பிட்டு இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டியிருக்கும். எனவே செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக யஷ்வந்தபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு, மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    ×