search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்"

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

    இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.



    தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.



    இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

    பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

    மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

    ×