search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச தொலைபேசி"

    தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி எண். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வக்கீல்கள், 5 மனநல ஆலோசகர்கள் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளது.

    குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த ‘181’ இலவச தொலைபேசி எண்ணை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (10-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் 181 மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகிறதோ அதே எல்லையில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவும்படி தெரிவிப்போம்.



    கவுன்சிலிங் தேவைப்பட்டாலோ, சட்ட உதவிகள் தேவைப்பட்டாலோ இலவசமாக வழங்குவோம். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்டு விடுதியில் தங்க வைத்து பிரச்சினை களை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். மருத்துவம் தொடர்பான தேவைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்ட பெண் எந்த பகுதியில் உள்ளாரோ அதற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு பெண்ணுக்கு உதவும்படி தெரிவிப்போம்.

    பெண்களுக்கான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன? அதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும். யாரை அணுக வேண்டும். மாணவிகளுக்கான அரசின் ஸ்காலர்ஷிப் விவரம் உள்பட அனைத்து தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பெற முடியும். பரிசோதனை அடிப்படையில் கடந்த அக்டோபர் முதல் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×